தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி: அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது வாக்காளர் பதிவு அலுவலர்கள், எந்த ஒரு தகுதியான வாக்காளரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் விட்டு விடக்கூடாது என கலெக்டர் இளம்பகவத் கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான இளம்பகவத் தலைமை வகித்து பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 01.01.2026-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடைசியாக சிறப்பு தீவிர திருத்தம் 01.01.2002-ஐ தகுதி நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில் 01.04.2002 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 84 ஆயிரத்து 39 வாக்காளர்கள் இருந்தனர். மாவட்டத்தில் தற்போது மொத்தம் 14 லட்சத்து 90 ஆயிரத்து 657 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரும் 04.11.2025 முதல் 04.12.2025 வரை ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தற்போதுள்ள வாக்காளர்களின் முன் அச்சிடப்பட்ட விவரங்களுடன் கூடிய கணக்கீட்டு படிவத்தை இரட்டை பிரதிகளில் விநியோகித்து, வாக்காளர்கள் படிவத்தை நிரப்புவதற்கு வழிகாட்டுவர்.
கணக்கீட்டு நேரத்தில் எந்தவொரு வீடும் மூடப்பட்டிருப்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர் கண்டறிந்தால், அவர் கணக்கீட்டு படிவங்களை அந்த வீட்டிலேயே வைத்து விடுவார்கள். நிரப்பப்பட்ட படிவங்களை சேகரிக்க குறைந்தது மூன்று முறை வருகை தருவார்கள்.
தற்போதுள்ள வாக்காளர்களுக்கு முன்கூட்டியே நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தைப்பதிவிறக்கம் செய்வதற்கும், நிரப்பப்பட்ட படிவங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைன் முறையில் பதிவேற்றுவதற்கும் https;// Voters.eci.gov.in, மற்றும் https://electors.eci.gov.in அல்லது ECINet செல்போன் செயலி மூலம் வசதி செய்யப்பட்டு உள்ளது.
கணக்கெடுப்பு காலத்தில் வாக்காளர்கள் எந்தவொரு ஆவணத்தையும் தரவேண்டிய அவசியமில்லை, வாக்காளர் பதிவு அலுவலர்களால் தங்களது பெயர், முந்தைய சிறப்பு தீவிர திருத்த பட்டியலுடன் இணைக்கப்படாத காரணத்தினால் அறிவிப்பு வழங்கும் பட்சத்தில் மட்டுமே சுய சான்றளிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த படிவங்கள் உரிய ஆய்வுகள் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பணியை மேற்கொள்ளும் போது, வாக்காளர் பதிவு அலுவலர்கள், எந்த ஒரு தகுதியான வாக்காளரை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதிலிருந்து விட கூடாது. தகுதியற்ற நபர்களை, வாக்காளராக சேர்க்க கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, சப்-கலெக்டர்கள் கோவில்பட்டி ஹிமான்ஷீ மங்கள், தூத்துக்குடி பிரபு, திருச்செந்தூர் கவுதம் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. ரவி, தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுகபெருமாள், அக்னல், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. முனியசாமி, சரவணபெருமாள்,சகாயராஜா, வடக்கு மாவட்ட அதிமுக ராஜேந்திரன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் சங்கர், முத்துமணி, தே.மு.தி.க, செல்வம், நாம் தமிழர் கட்சி அலங்காரசகாயம், தகவர், ஆழ்வார்திருநகரி வட்டார காங்கிரஸ் கமிட்டி கோதண்டராமன், பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சிவராமன், பாரதிய ஜனதா கட்சி வடக்கு மாவட்ட துணை தலைவர் பிரபு, சி.பி.எம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராஜா, பகுஜான் சமாஜ் கட்சி ரத்னசாமி, உதயக்குமார், சுதர்சனன், வி.சி.க ராம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
