*கலெக்டர் சதீஸ் தகவல்
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 11,935 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சதீஸ் தெரிவித்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து காணொலி மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 349 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை மாவட்ட கலெக்டர் சதீஸ், வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர்.
பின்னர் கலெக்டர் சதீஸ் பேசியதாவது: தமிழக முதல்வர் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்காக புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடு அரசால் பஸ் வசதி இல்லா குக்கிராம பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் தடைபடாமல் இருக்கவும், அவர்கள் தொடர்ந்து சிறந்த முறையில் கல்வி கற்கவும் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 110 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2025-2026ம் கல்வி ஆண்டில் 11ம் வகுப்பு படிக்கும் 5,521 மாணவர்கள், 6414 மாணவிகள் என மொத்தம் 11,935 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.
குழந்தைகள் தினத்தையொட்டி அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 176 மாணவர்களுக்கும், அதியமான்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 173 மாணவிகளுக்கும் என மொத்தம் 349 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு விரைவாக சரியான நேரத்தில் சென்று வர இயலும்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகைகள் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தினை தமிழக முதல்வர் செயல்படுத்தியுள்ளார்.
மேலும், மாணவ-மாணவிகளின் நலனுக்கென தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி, முழுமையாக பள்ளி மற்றும் உயர்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பண்டரிநாதன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அரங்கநாதன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் பிரசன்ன மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


