திருவொற்றியூரில் இருந்து இன்று அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மிக பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்
சென்னை: சட்டமன்றத்தில் இந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் ‘ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு 2,000 பக்தர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர்’ என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் இலவசமாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இதற்கான செலவை அரசே ஏற்கும். அதன்படி, 25, ஆகஸ்ட் 1, 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 60 முதல் 70 வயதிற்குட்பட்ட மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்த வகையில் ஆடி மாத அம்மன் கோயில்கள் ஆன்மிகப் பயணம் சென்னையில் இன்று காலை தொடங்குகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோயிலில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இக்குழுவினருக்கு திருவொற்றியூர் வடிவுடையம்மன், பாரிமுனை காளிகாம்பாள், மயிலாப்பூர் கற்பகாம்பாள், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் மற்றும் மாங்காடு காமாட்சி அம்மன் ஆகிய கோயில்களில் சிறப்பு தரிசனமும், மதிய உணவும் வழங்கப்படுகிறது.