திருவிக நகர் தொகுதியில் ரூ.5.9 கோடியில் நிறைவுற்ற பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
பெரம்பூர்: சென்னை திருவிக நகர் தொகுதி திமுக எம்எல்ஏ தாயகம்கவி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5.9 கோடியில் நிறைவுற்ற மற்றும் புதிய திட்ட பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏ தயாகம் கவி, கலாநிதி வீராசாமி எம்பி, மேயர் பிரியா உள்பட பலர் பங்கேற்றனர். பணிகளை தொடங்கி வைத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இன்று ஒரே ஒரு நிகழ்ச்சி தான் வாங்க என்று அமைச்சர் சேகர்பாபு அழைத்தார். ஆனால் 6 நிகழ்ச்சிக்கு மேல் ஏற்பாடு செய்துள்ளார். எனக்கு கூட பலமுறை ஆசை வரும். நாமும் இந்த கிழக்கு மாவட்ட தொகுதிக்கு வந்து விடலாமா என்று. அந்த அளவுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளது. ஆண்டின் 365 நாளும் நிகழ்ச்சி நடக்கும் மாவட்டம் இந்த கிழக்கு மாவட்டம் தான்.
தமிழ் புதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களை நாம் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அரசுப்பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தனியார் உள்பட எந்த கல்லுாரியில் சென்று உயர்கல்வி படித்தாலும் அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை தருவது நம் திராவிட மாடல் அரசு. மூத்த முன்னோடிகள் தான் கழகத்தின் வரலாறு. தலைவர் கருணாநிதியை 5 முறை முதல்வராக அமர வைத்தீர்கள். இன்று நம் தலைவர் ஸ்டாலினும் முதல்வராக அமர வைத்தது நீங்கள் தான். மூத்த முன்னோடிகள் பெரியாரை நேரில் பார்த்து இருப்பீர்கள், பலர், அண்ணாவுடன் சேர்ந்து பணியாற்றி இருப்பீர்கள். கருணாநிதி மற்றும் ஸ்டாலினுடன் போராட்டங்களில் பங்கேற்று இருப்பீர்கள்.
ஆனால் நான் பெரியார், அண்ணாவை நேரில் பார்க்கவில்லை. அதனால் தான் உங்களை பார்க்கும்போது பெருமையாகவும் பொறாமையாகவும் இருக்கும். இன்னும் 7 மாதங்களில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது. முதல்வர் குறைந்தது 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு அச்சாரமாக முதலில் இந்த திருவிக நகர் தொகுதி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் துறைமுகம் பகுதி செயலாளர்கள் முரளி, ராஜசேகர், மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பரிமளம் வட்ட செயலாளர்கள் பரத், கதிரவன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* திட்ட பணிகள்
புளியந்தோப்பு கே.எம்.கார்டனில் ரூ.49.50 லட்சத்தில் விளையாட்டுத் திடல், ரூ.49.80 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம், பிரீஸ்லி நகரில் ரூ.14 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம், புளியந்தோப்பு, அயனாவரம் பகுதிகளில் 5 இடங்களில் ரூ.1.04 கோடியில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடைகள், அம்மையம்மாள் தெருவில் ரூ.38 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், நேரு ஜோதி நகர் உள்பட 4 இடங்களில் ரூ.1.12 கோடியில் பல்நோக்கு மைய கட்டிடம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், பெரம்பூர் நெடுஞ்சாலையில் ரூ.31.28 லட்சத்தில் பல்நோக்கு மைய கட்டிடம், நெல்வயல் சாலையில் ரூ.30.45 லட்சத்தில் அமைய உள்ள பல்நோக்கு மைய கட்டிடம், ராஜிவ்காந்தி பூங்கா நகரில் ரூ.30.90 லட்சத்தில் அமைய உள்ள பல்நோக்கு மைய கட்டடம் மற்றும் தொகுதிக்குட்பட்ட 6 வார்டுகளில் ரூ.50 லட்சத்தில் அமைய உள்ள ஸ்மார்ட் வகுப்பறைபணிகளை தொடங்கி வைத்தார்.
* நலத்திட்ட உதவிகள்
துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தின் அழகு கலை பயிற்சி கட்டிட்த்தை திறந்து வைத்தார். மேலும், தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் தையல் பயிற்சி முடித்த 129 பேருக்கு தையல் இயந்திரம், கணினி பயிற்சி முடித்த 135 பேருக்கு மடிக்கணினி வழங்கினார். அதேபோல் திமுக குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் 83 பேருக்கு மடிக்கணினி, திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார். கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருநங்கைகளுக்கு நல திட்ட உதவிகள், மகளிர் சுய உதவி குழுவிற்கு சுழல் நிதி வழங்கினார். மேலும், துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 4 ரேஷன் கடைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.