Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மாநகராட்சியின் சார்பில் ரூ 14.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட திரு.வி.க.நகர் மண்டலத்தில் மாநகராட்சியின் சார்பில் ரூ 14.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (17.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர், திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-67, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை அருகில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.9.68 கோடி மதிப்பில் 17,071 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் வார்டு அலுவலகக் கட்டடப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட ஒப்பந்ததாரர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்தக் கட்டடமானது செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர், மாமன்ற உறுப்பினர், உதவி வருவாய் அலுவலர், சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோருக்கு தனித்தனி அறைகள், இ-சேவை மையம், கலந்தாய்வுக் கூடம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பேப்பர் மில்ஸ் சாலை அருகில் மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ், ரூ.4.82 கோடி மதிப்பில் 13,805 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட ஒப்பந்ததாரர் மற்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்தக் கட்டடமானது, காத்திருப்பு அறை, புறநோயாளிகள் பிரிவு, மருத்துவ அலுவலர் அறை, யுனானி மருத்துவ அறை, பல்மருத்துவ அறை, இரத்த சேகரிப்பு அறை, ஆய்வகம், அவசரப் பிரிவு அறை, என்.சி.டி. ஸ்கிரீனிங் அறை, தடுப்பூசி செலுத்தும் அறை, பாலூட்டும் தாய்மார்கள் அறை, மருந்தகம், எம்.ஆர்.டி. அறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட அறை, மருந்துகள் பாதுகாப்பு அறை, அலுவலர் மற்றும் பணியாளர் அறை, மின்தூக்கி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

இந்த ஆய்வுகளின்போது, மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் புனிதவதி எத்திராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.