திருவாரூரில் ரூ.50 கோடியில் ஆடை உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து
சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், SCM Garments பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) ஆடை உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்றதில் இருந்து, அனைவரையும் உள்ளடக்கிய சீரான மற்றும் பரவலான வளர்ச்சி என்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில், இந்த திட்டம் நிறுவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. SCM Garments பிரைவேட் லிமிடெட் ஜவுளித் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் SCM Garments குழுமத்தின் துணை நிறுவனமான SCM Garments பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்), உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட ஆடைகள் தயாரிக்கும் நிறுவனமாகும்.
இந்நிறுவனம், 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவாரூர் மாவட்டத்தில் ஆடை உற்பத்தி அலகு அமைத்திட திட்டமிட்டுள்ளது. முதலமைச்சர் முன்னிலையில் இன்றையதினம், இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின்போது, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர், நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் பு. அலர்மேல்மங்கை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்ரமணியன், SCM Garments நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.பி.கே. பரமசிவம், செயல் இயக்குநர் கௌசிக் குமரன், திட்ட மேலாளர் ஸ்ரீநிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
