சென்னை: திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஆக.8) முதல் ஆக.13 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று திருவண்ணாமலை, வேலூா் மற்றும் திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழையும், சென்னையில் இன்று ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக பலத்த மழை காரணமாக திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாளை(ஆக.9) தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு எனவும் கணிக்கப்பட்டுள்ளது.