திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கவர்னர் மாளிகை மற்றும் முதல்வர் இல்லத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக நீதிமன்றங்கள், கலெக்டர் அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் ஓட்டல்களுக்கு அடிக்கடி போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் நேற்று திருவனந்தபுரம் தம்பானூர் காவல் நிலையத்திற்கு வந்த ஒரு இமெயிலில் கவர்னர் மாளிகை மற்றும் முதல்வர் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக கவர்னர் மாளிகையிலும், முதல்வர் இல்லத்திலும் வெடிகுண்டு பிரிவு போலீசார் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர். ஆனால் இந்த சோதனையில் சந்தேகத்திற்கிடமான வகையில் எந்தப் பொருளும் சிக்கவில்லை. இதற்கிடையே மிரட்டல் இமெயில் அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். நேற்று முன்தினம் திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.