கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலும் கடல் நடுவே உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டம் ஆகியவற்றை காண விரும்புகின்றனர். தற்போது திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் நினைவு மண்டபத்தை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இரவு நேரங்களில் மின்னொளி வெளிச்சத்தில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலத்தை லேசர் ஒளி வெளிச்சத்தில் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக கரையில் இருந்து கடலுக்கு அடியில் ராட்சத ஒயர்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் படகில் சென்று கண்ணாடி பாலத்தை காண முடியாத சுற்றுலா பணிகள் கடற்கரையில் அமர்ந்து கண்டுகளிக்கின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலைக்கு மின்சாரம் திடீரென தடைப்பட்டது. ராட்சத அலைகளில் சிக்கி ஒயர்கள் பழுது காரணமாக ஒரு வாரமாக இரவில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலத்தை கண்டுகளிக்க முடியவில்லை. பின்னர் மின்சார வாரியம் சார்பாக பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் இணைப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலை ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது. இந்தநிலையில் மீண்டும் கடல் அலை காரணமாக ஒயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே கடந்த 4 நாளாக திருவள்ளுவர் சிலைக்கு மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் மாலையில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் கடற்கரையில் இருந்து திருவள்ளூர் சிலை, கண்ணாடி பாலத்தை பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
எனவே கன்னியாகுமரி மின்சார வாரியம் பழுதை முறையாக சரி செய்து இரவு நேரங்களில் கடற்கரையில் அமர்ந்து வள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை காண வழிவகை செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
