Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து: ரயிலில் டீசல் உள்ள பெட்டிகள் வெடித்து சிதறுவதால் பதற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. சரக்கு ரயில் பெட்டிகள் அடுத்தடுத்து தீ பிடித்து எரிந்ததால் திருவள்ளூர் ஏகாட்டூரைச் சுற்றிய 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு புகையின் பாதிப்பு உணரப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர். ரயில் தடம் புரண்டதால் தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தீவிபத்தைத் தொடர்ந்து சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூர் புறநகர் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டுள்ளது. மங்களூரு ரயில் திருவள்ளுரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள், ஆங்காங்கே இறங்கி நடந்து சென்றனர். சென்னை வரவேண்டிய, சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதால், அரக்கோணம், திருவள்ளூரிலிருந்து 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. விபத்து ஏற்பட்ட பகுதியில் அருகில் உள்ள குடியிருப்புகளில் சமையல் கேஸ் சிலிண்டர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீ விபத்தையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். மேலும் "நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. சரக்கு ரயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.