திருவள்ளூர் மாவட்ட மதசார்பற்ற கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வரும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக செயலாளர்கள் கூட்டறிக்கை
திருவள்ளுர்: திருவள்ளூர் மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருத்தணி எஸ்.சந்திரன் மற்றும் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளது.
சிறுபான்மையினர் வாக்குகள், பட்டியலின மக்களின் வாக்குகள் மற்றும் பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றை குறிவைத்து நீக்கும் நோக்கோடு தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்க்கும் சதிதிட்டத்தோடு ஒன்றிய பாஜக அரசை தனக்கு பாதுகாவலாக வைத்துக்கொண்டு தேர்தல் ஆணையம் இதனைச் செய்திட முயன்றிருப்பதோடு, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு உள்மட 12 மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையை பறிப்பதாக உள்ளது.
ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டி புதைப்பதாகவும் உள்ளது. அத்துடன் தேர்தல் ஆணையத்தின் அவசரமே அதிக சந்தேகத்தை எழுப்புகிறது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது. எனவே, இந்த சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும் அதனை செவிமடுக்காத ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சதிகாரப் போக்கில் இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வுகொண்டு வந்துள்ளதை கண்டித்து ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நவம்பர் 11ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறுகிறது.
ஆர்பாட்டத்தில் திமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி கண்டன உரையாற்றுகிறார். எனவே ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள், திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி இந்நாள் முன்னாள் பிரதிநிதிகள், நிர்வாகிகள் நிர்வாக பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றி பெற செய்திட வேண்டுகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

