Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை திருவல்லிக்கேணி சீமாத்தம்மன் கோயிலில் பரபரப்பு அம்மனுக்கு எருமை கன்றுக்குட்டியை பலியிட முயன்றதாக சீரியல் நடிகை வீடியோ வெளியீடு: திட்டவட்டமாக மறுத்த கோயில் நிர்வாகம்

சென்னை: திருவல்லிக்கேணியில் சீமாத்தம்மன் கோயிலில் எருமை கன்றுக்குட்டி பலியிட முயன்றதாக சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தாலும் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி ராம் நகர் பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான சீமாத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி தற்போது சீமாத்தம்மன் கோயிலில் திருவிழா நடந்து வருகிறது.

இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் வேண்டுதல் நிவர்த்திக்காக ஆடு, கோழிகளை நேர்த்தி கடனாக விடுவது வழக்கம். அதன்படி கோவிலில் நேற்று முன்தினம் பக்தர் ஒருவர் வழிபாட்டுக்காக எருமை கன்றுக்குட்டி ஒன்று காணிக்கையாக கோயில் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சின்னத்திரை நடிகை சந்தியா தனது சமூகவலைத்தள பக்கத்தில் கோவிலில் எருமை கன்றுக்குட்டி பலியிட அழைத்துச் செல்லப்படுவதாகவும், அதை கோயில் அருகே உள்ள சமூக ஆர்வலர்கள் யாரேனும் இருந்தால் காப்பாற்றும்படி கோரிக்கை வைத்தார்.

அதன்படி விலங்கு சமூக ஆர்வலர் சாய் விக்னேஷ் என்பவர் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறை உதவியுடன் கோயில் நிர்வாகிகளிடம் எருமை கன்றுக்குட்டி பலியிடப்படுகிறதா என்று விசாரித்தார். அப்பொழுது கோயில் நிர்வாகம் சார்பில் எந்த ஆடு மாடுகளும் கோயிலில் பலியிடுவது கிடையாது என்று கூறிவிட்டனர். இருந்தாலும் சமூக ஆர்வலர் சாய் விக்னேஷ் அளித்த புகாரின் படி திருவல்லிக்கேணி போலீசார் கோயில் நிர்வாகத்திடம் மாடு, ஆடுகள் பலியிடப்படுகிறதா என்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் ஆடு, மாடு எதுவும் பலியிடப்படவில்லை என தெரிய வந்தன. இருப்பினும், போலீசார் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட எருமை கண்ணு குட்டியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட கண்ணுக்குட்டி ஜஸ் அவுஸ் காவல்நிலையத்தில் அழைத்து செல்லப்பட்டன. இந்த சம்பவத்தால் திருவல்லிக்கேணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சீமாத்தம்மன் கோயில் நிர்வாகி புருஷோத்தமன் கூறியதாவது:

சீமாத்தம்மன் கோயில் நூற்றாண்டு பழமையான கோயிலாகும். இந்த கோயிலுக்கு காந்தியடிகள் மற்றும் காமராஜர் நேரில் வந்து வழிபாடு செய்துள்ளனர். இங்கு யாரும் விலங்குகளை பலியிடுவது கிடையாது. இது முற்றிலும் தவறான வதந்தி. 60 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் சிலர் தனது வேண்டுதல் நிறைவேறுவதற்காக விலங்குகள் பலியிட்டு இருக்கலாம். ஆனால் எங்கள் தலைமுறைக்கு பிறகு அப்படி பலியிடுவது கிடையாது. இது முற்றிலும் தவறான தகவல்.

தற்போதும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக மாடுகளை கோயிலுக்கு சிலர் நேர்த்திக்கடன் கொடுக்கின்றனர். அதை நாங்கள் கோயில் மாடுகள் போன்று சுதந்திரமாக விட்டு விடுவோம் மற்றபடி இங்கே எந்த விலங்குகளும் பலியிடுவது கிடையாது. இதுகுறித்து எங்களிடம் காவல்துறை அதிகாரிகள் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் விசாரணை நடத்தினர். அதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் உரிய பதில் அளித்துள்ளோம்.

சமூக வலைதளங்களில் பரவும் இதுபோன்ற தவறான வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். என்றார். இது தொடர்பாக புகார் அளித்த சமூக ஆர்வலர் சாய் விக்னேஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் காவல்துறை உதவி ஆய்வாளருடன் கோயில் நிர்வாகிகளிடம் விசாரித்தேன். அப்பொழுது கோயில் நிர்வாகிகள் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் வேண்டுதலுக்கு இணங்க மாடுகள் பலியிடுவது வழக்கம். அதன்படி பலியிட எருமை கன்றுக்குட்டி வைத்திருந்தோம் ஆனால் இதை சமூக வலைதளங்களில் பரப்பியதால் அதை நிறுத்தி விட்டோம் என்று கோயில் நிர்வாகிகள் கூறினர்’’ என்றார்.