திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தற்காலிக நிவாரண மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து துணை முதலமைச்சர் ஆய்வு..!!
சென்னை: திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தற்காலிக நிவாரண மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,துணை முதலமைச்சர் இன்று அதிகாலையில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் தெருவில் செயல்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடம் மற்றும் தற்காலிக நிவாரண மையம் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை அய்யா தெருவில் உள்ள மைய சமையல் கூடத்தில் உணவு தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதையும், சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தில் பொதுமக்கள் தங்குவதற்கு தேவையான பாய், தலையணை உள்ளிட்டவை தயாராக இருப்பதையும், அடிப்படை வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாசாலை – ஜி.பி.சாலை சந்திப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளை துணை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் கனமழையை பொதுமக்கள் எதிர்கொள்ள தேவையான உதவிகளையும், பணிகளையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் துணை முதலமைச்சர் அறிவுருத்தினார். இந்த ஆய்வுகளில் பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கெளஷிக்,இ,ஆ.ப., வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா,இ.ஆ.ப., துணை ஆணையர் (வருவாய்) எம்.பிரித்விராஜ்,இ,ஆ.ப., மண்டல அலுவலர் டி.விஜய்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.