திருத்தணி: திருவாலங்காடு அருகே பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த 2 மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமான ஒரு மாணவர், மற்றொரு பள்ளி மாணவரை கத்தியால் சரமாரி வெட்டியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருவாலங்காடு ஒன்றியம், அருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இன்று காலை பள்ளிக்கு வந்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த ராகவேந்திரன், அருங்குளம், வி.என்.கண்டிகையை சேர்ந்த தருண்குமார் ஆகிய 2 மாணவர்களும் மற்றவர்களுடன் சேர்ந்து கபடி விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது மாணவர்களான ராகவேந்திரனுக்கும் தருண்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமான ராகவேந்திரனை தருண்குமார் கை, கால்களால் சரமாரி தாக்கியுள்ளார். பின்னர் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் ராகவேந்திரனை சரமாரி வெட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கத்திவெட்டில் படுகாயம் அடைந்த ராகவேந்திரனை ஆசிரியர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.