திருத்தணி: திருவாலங்காடு அருகே என்.என்.கண்டிகை நெமிலி பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. இதனால் திருத்தணியில் இருந்து என்.என்.கண்டிகை வழியாக ஆந்திராவில் சத்தியவேடு, நாகலாபுரம் பகுதிகளுக்கு சென்று வர போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டது. இதன் மூலம் 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 50க்கும் மேற்பட்ட உயர் மின்விளக்குகள் பொறுத்தப்பட்டது.
வாகன ஓட்டிகள், கிராம மக்கள் அச்சமின்றி பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் சில மாதங்களாக மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படுவதோடு சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடக்கிறது. இரவு நேரங்களில் இச்சாலையில் பயணம் செய்ய அச்சமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
