திருவையாறு: ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் அப்பர் கயிலை காட்சி நேற்றிரவு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோயில் தென் கயிலாயம் என்றழைக்கப்படுகிறது. இங்கு அப்பருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று அப்பர் கயிலை காட்சி நடைபெறுவது வழக்கம்.
அப்பர் சாமி, தளர்ந்த வயதிலும் கயிலை சென்று இறைவனை கண்டே தீருவேன் என்று உறுதியுடன் வடதிசை நோக்கி சென்று கொண்டிருந்தார். இறைவன் ஒரு முனிவர் வடிவில் அவர் முன் தோன்றி கயிலையை மானிடர் தனது ஊனக்கண்ணால் காணல் அரிது என்று திரும்பி செல்லும்படி கூறினார். அப்பர் மறுக்கவே முனிவரும் ஒரு பொய்கையில் மூழ்குமாறு கூறினார். அப்பரும் அவ்வாறே அந்த பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் உள்ள குளத்தில் எழுந்தார். இறைவனும் அவருக்கு கயிலை காட்சியை காட்டியருளினார். இதன் நினைவாக ஐயாறப்பர் கோயிலில் ஆண்டுதோறும் அப்பர் கயிலை காட்சி நடக்கிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான கயிலை காட்சி நேற்று ஆடி அமாவாசையையொட்டி நடந்தது. இதையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஐயாறப்பரை வழிபட்டனர். மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.
அதனை தொடர்ந்து இரவு அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் ஆடி அமாவாசை அப்பர் கயிலை காட்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவையாறே விழாக்கோலம் பூண்டிருந்தது.