Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருவாடானை அருகே 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு: நிலம், தானிய தானம் குறித்து தகவல்

திருவாடானை: திருவாடானை அருகே, 17ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், நிலம் மற்றும் விதைப்புக்கு தானியம் தானம் வழங்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே, கட்டுக்குடி ஊரணியில் பழமையான கல்வெட்டு இருப்பதாக திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பழனியப்பன், தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதன்பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு கட்டுக்குடியில் கைக்கோளர் ஊரணியில் உடைந்து கிடந்த கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது: கட்டுக்குடி ஊரணியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு 66 இஞ்ச் நீளம், 14 இஞ்ச் அகலம் கொண்டது. இதன் மேற்பகுதியில் திரிசூலம், அதன் கீழே 24 வரிகள் உள்ளன.

இதில், சக ஆண்டு 1579 தமிழ் ஆண்டு யேவிளம்பி சித்திரை மாதத்தில் சுக்கிரவாரமும் புணர்பூசமும் சுக்லபட்சத்து சத்தமியும் பெற்ற புண்ணிய காலத்தில் ரெகுநாதத் திருமலைச் சேதுபதி காத்த தேவருக்குப் புண்ணியமாக திருவாடானை, ஆடானை நாயகர் கோயில் திருநந்தவனத்துக்காக கட்டுக்குடியில் விரைப்பாடாக 50 கலம் மன்னரால் கொடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அளவு தானியங்களை விதைப்பதற்குத் தேவைப்படும் நில அளவை விரைப்பாடு என்பர். இதில், 50 கலம் தானியங்களை விதைப்பதற்குத் தேவைப்படும் நில அளவு நந்தவனத்துக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தானத்தை சந்திரசூரியன் இருக்கும் வரைக்கும் அனுபவித்துக் கொள்ள மன்னர் கட்டளையிட்டுள்ளார்.

இந்தப் புண்ணியத்துக்கு அழிவு பண்ணியவன் கெங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொன்ன பாவத்திலே போவானாகவும்’ என கல்வெட்டு எச்சரிக்கிறது. இதில் கலம் என்பது ‘ள’ என்ற குறியீடாக உள்ளது. 50 கலம் முதலில் தமிழ் எண் மற்றும் குறியீடாகவும், பின்னர் எழுத்தாலும் எழுதப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆங்கில ஆண்டு கி.பி.1657 ஆகும். கல்லில் சில இடங்களில் எழுத்துகள் தேய்ந்து அழிந்துள்ளன எனக் கூறினார்.