திருவாடானை : திருவாடானை அருகே குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவாடானை அருகே குளத்தூர் ஊராட்சி, கீழ்க்குடி பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக அந்த பகுதிக்கு உள்ளூர் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் உரிய பராமரிப்பு இல்லாததால் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத சூழல் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குளத்தூர் பகுதியில் இருந்து குணவதிமங்கலம் ஜம்பு வழியாக அந்த பகுதிக்கு சென்ற குடிநீர் எவ்வித காரணமும் இன்றி கடந்த சில மாதங்களாக நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர்.
அப்பகுதிக்கு வாகனம் மூலம் தண்ணீர் டேங்குகளில் அடைத்து கொண்டு வரப்படும் குடிநீரை ஒரு குடம் 10 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலை உள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குளத்தூர் ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு இந்த கிராமத்தினர் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் நேற்று கீழ்க்குடி பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் வந்து கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, உடனடியாக குடிநீர் வழங்கக்கோரி திருவாடானை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த யூனியன் அதிகாரிகளும், திருவாடானை போலீசாரும் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிறகு விரைவில் குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் தர்ணாவில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.