தமிழ்நாட்டில் ஓடாமல் இருந்த திருத்தேர்களை ஓட வைத்த பெருமை திராவிட மாடல் அரசையே சேரும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
சென்னை: தமிழ்நாட்டில் ஓடாமல் இருந்த பல திருத்தேர்களை ஓட வைத்த பெருமை திராவிட மாடல் அரசையே சேரும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயிலில் ரூ.94 லட்சத்தில் புதிதாக கட்டப்பட உள்ள அன்னதான கூடம் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
900 ஆண்டுகளுக்கு மேல் கங்காதரேசுவரர் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடந்தேறியது. இதுவரை ரூ.19 கோடிக்கு திருப்பணிகள் நடந்தது. 100 பக்தர்கள் உணவு அருந்தும் வகையில் ரூ.94 லட்சத்தில் அன்னதானக் கூடம் அமைக்கப்பட உள்ளது. மூன்று மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும். திராவிட மாடல் ஆட்சியில் தான் பல்வேறு கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடந்தது.
தற்போது வரை 3432 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்தது. கோயில்களில் ஓடாமல் இருந்த பல தேர்கள் திமுக ஆட்சியில் தான் ஓடியது. அந்த பெருமை திமுகவையே சேரும். 18 ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் இருந்த சிவகங்கை மாவட்டம் கண்டம்தேவி கோயில் திருத்தேரை ஓட வைத்த பெருமை முதலமைச்சரை சேரும். அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழி நடத்துவதில் எந்த தவறும் இல்லை என முருகன் கூறுவது பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்.
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அன்புமணி கூறுவது, தூங்குபவர்களை எழுப்பி விடலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இதுதொடர்பாக பதில் அளிக்க 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதில் அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மேயர் பிரியா, மண்டல குழு தலைவர் கூ.பி.ஜெயின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.