Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் மறைந்த வள்ளி யானைக்கு ரூ.49.50 லட்சத்தில் மணிமண்டபம்: விரைவில் திறப்பு விழா

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் இறந்த வள்ளி என்று அழைக்கப்பட்ட யானைக்கு ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட யானை சிற்பத்துடன் கூடிய மணிமண்டபம் பணிகள் முடிந்த நிலையில், விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. திருத்தணி முருகனுக்கு தெய்வானையுடன் திருமணத்தின்போது சீதனமாக தேவேந்திரன் ஐராவதம்(யானை) வழங்கியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முருகன் வாகனம் மயில் என்று போற்றப்பட்டாலும் திருத்தணி கோயிலில் மட்டும் முருகன் வாகனமாக யானை விளங்குகிறது. திருத்தணி முருகன் கோயிலில் முதல் ஐராவதம் யானையை வணங்கிய பின்புதான் முருகப்பெருமானை பக்தர்கள் தரிசிக்க செல்வது வழக்கம். எனவே, இக்கோயிலுக்கு கடந்த 1981ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் சார்பில் வள்ளி என்று அழைக்கப்பட்ட பெண் யானை வழங்கப்பட்டது.

முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு வள்ளி யானை ஆசீர்வாதம் கொடுத்து வந்தது. விழாக்களில் உற்சவர் உலாவின் போது யானை ஊர்வலமாக அழைத்துச் செல்வது முருகன் கோயிலின் சிறப்பாக இருந்து வந்தது. கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி உடல்நலக்குறைவால் வள்ளி யானை உயிரிழந்தது. யானைக்கு நந்தி ஆற்றங்கரையில் முருகன் கோயிலின் உப கோயிலான ஆறுமுகசாமி கோயில் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டமன்றத்தில் வள்ளி யானைக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி யானைக்கு மணிமண்டபம் கட்ட ரூ.49.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிமண்டபம் கட்டுமான பணிகள் தொடங்கியது. 400 சதுர அடியில் யானை மணிமண்டபம் கட்டப்பட்டு யானை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மணிமண்டபம் பணிகள் முழுமை பெற்றுள்ள நிலையில் விரைவில் மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற உள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டப்பேடையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.