திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் 1.50 லட்சம் ஹெக்டேரில் நெல், கரும்பு, பயிர் வகைகள் மற்றும் காய்கறி, மலர் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில் விவசாயிகள் அதிகளவில் நெல் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்தாண்டு பருவமழை சராசரியாக பொய்த்தாலும், நீர்நிலைகளில் போதுமான அளவில் நீர் இருந்ததால், விவசாயிகள் நெல் பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டினர்.
சொர்ணவாரி பட்டத்திற்கான நடவு செய்யப்பட்ட நெல் பயிர் மகசூலுக்கு வந்த நிலையில், அறுவடை பணி கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. பருவமழை தொடங்க உள்ள நிலையில் விவசாயிகளின் அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில் நவீன அறுவடை இயந்திரத்தை பயன்படுத்தி துரித வேகத்தில் அறுவடை செய்கின்றனர். கடந்த காலங்களில் கூலி ஆட்களை வைத்து நெல் அறுவடை செய்வதற்கு காலம், பணம் விரயம் ஆவதை தடுக்கும் வகையில் பெரும் பாலான விவசாயிகள் இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர்.
சொர்ணவாரி பட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய மாவட்டம் முழுவதும் 50 பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் எதிர்பார்த்தபடி விற்பனை செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு அதிகபட்சமாக 3 நாட்களில் அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால், சொர்ணவாரி பட்டத்தில் சன்னரகம் குவிண்டாலுக்கு ரூ.100 உயர்த்தி 2545 ரூபாயாக வழங்கப்படுகிறது. குண்டு ரகம் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.