Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா இன்று தொடங்கியது: காவடியுடன் பக்தர்கள் குவிந்தனர்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் அஸ்வினியுடன் இன்று காலை ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக தொடங்கியது. மூலவர் முருகப்பெருமானுக்கு பச்சை வைரக்கல் அணிவித்து தங்க கவசம் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடியுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. இந்த கோயிலில் ஆடி கிருத்திகை தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. இன்று அஸ்வினியுடன் 5 நாட்கள் நடைபெறும் ஆடி கிருத்திகை தெப்பத்திருவிழா தொடங்கியது. அதிகாலை மூலவருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், கதம்பம் உள்ளிட்ட வாசதனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு பச்சை வைரக்கல் அணிவிக்கப்பட்டது. பின்னர், தங்க கவசம் அலங்காரத்தில் முருகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து 1008 வில்வ இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் காவடி மண்டபத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் மலைக் கோயிலுக்கு வந்து அரோகரா என பக்தி பரவசத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து காவடி மண்டபத்தில் காவடிகளை செலுத்தி வருகின்றனர். ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலைக்கோயில் மற்றும் சரவணப்பொய்கை திருக்குளம் மலைப்பாதை பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த, குளிக்க ஏதுவாக சரவண பொய்கை திருக்குளம் மற்றும் நல்லாங்குளம் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்

திருத்தணி முருகன் கோயில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தும் வகையில் அரக்கோணம்-திருத்தணி இடையில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா நடைபெற உள்ள 5 நாட்களும் காலை 10.20 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு, திருத்தணி ரயில் நிலையம் சென்றடையும். திருத்தணியில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் ரயில் நிலையம் சென்றடையும். இதுபோல் மதியம் 1 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, திருத்தணி வந்தடையும் மின்சார ரயில், மீண்டும் திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து 1.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.