திருப்புவனம் : திருப்புவனம் அருகே பழையனூர் கிருதுமால் நதிக்கரையில் பிரான்குளம் உள்ளது. 500ஆண்டுகளுக்கு முன்னர் காலச்சூழலால் அழிந்து போனது. அங்கு மக்கள் யாரும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதற்கு அருகே தற்போது புதிய பிரான்குளம் உருவாக்கி அங்கு மக்கள் வசிக்கின்றனர்.பழைய பிரான் குளத்தில் சுமார் இரண்டு மைல் சுற்றளவில் உழவு செய்யும் போதும், கிணறு தோண்டும் போதும் பானை ஓடுகள் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன.
அக்கால மக்களின் வாழ்விடமான பழைய பிரான்குளத்தில் பெரிய உருவில் பிள்ளையார் சிலை பாதி உருவம் மண்ணிலும் பாதி உருவம் வெளியில் தெரியும் வகையில் உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். பானை ஓடுகள் அதிகளவில் கிடைப்பதால் இப்பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பிரான்குளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன், கடந்த ஆண்டு பானை ஓடுகளை எடுத்து சென்று கீழடி அகழாய்வு தள இணை இயக்குநர் ரமேஷ், அஜய் ஆகியோரிடம் கொடுத்து ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
கீழடி அகழாய்வுகள் தமிழக தொல்லியத் துறையினர் ரமேஷ், அஜய் ஆகியோர் நேற்று பிரான்குளம் சென்று ஏராளமான பானை ஓடுகள் சிறிக் கிடந்ததை பார்வையிட்டனர். சிவப்பு வண்ண ஓடு அலங்கரிக்கப்பட்ட நிலையில் கிடைத்தது. இந்த ஓடு பழங்காலத்தை சேர்ந்தது’’ என்றனர்.