சென்னை: திருப்போரூரில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் விமானப் படையினர் முகாம் அமைத்து, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் பகல் 1.30 மணிக்கு `பிளேட்டஸ் பி.சி 7’ என்ற ஒரு பயிற்சி விமானம் திருப்போரூர் கழினிவெளி பகுதியில் வான்வெளியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விமானத்தை தொடர்ச்சியாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து. விமானத்தை இயக்கிய விமானி சுபன் பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினார். விமானி இல்லாமல் தாறுமாறாக இயங்கிய விமானம் தண்டலம், திருப்போரூர் கிராமங்களில் வீடுகளின் மேல் சுற்றியபடி வந்து நெம்மேலி சாலையில் உள்ள தனியார் உப்பு பேக்கிங் செய்யும் தொழிற்சாலையின் பின்பக்கத்தில் விழுந்து அப்பளமாக நொறுங்கியது. இதனையறிந்த விமானப்படையினர், நேற்று முன்தினம் மாலை விபத்து நடந்த தொழிற்சாலையையும், அதை சுற்றியுள்ள பகுதியையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இரவு முதலே துப்பாக்கி ஏந்திய விமானப்படையினர் பாதுகாப்பில் அப்பகுதி இயங்கியது. நேற்று அதிகாலை விடிந்ததும் விமானம் விழுந்த இடத்தில் உள்ள சேற்றை வெளியேற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விமானத்தின் இஞ்சின், கருப்புப்பெட்டி, டயர்கள் போன்றவை சுமார் 10 அடி ஆழத்தில் சேற்றில் புதைந்திருக்கலாம் என்றும் அவற்றை தேடி எடுத்த பிறகே இப்பணிகள் முடிவடையும் என்று தெரிகிறது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து விமானப்படையின் வல்லுனர் குழு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விமானம் விழுந்த தொழிற்சாலை வழக்கம்போல் உள்பகுதியில் இயங்கலாம் என்றும் தொழிலாளர்களை குறைந்த அளவில் வைத்து வேலை செய்துக்கொள்ளுமாறும் விமானப்படை சார்பில் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்
விமானம் விழுந்த இடத்தில் இருந்து மேற்கு திசையில் 500 மீட்டர் தொலைவில் தனியார் பள்ளி ஒன்று 1000 குழந்தைகளுடன் செயல்பட்டு வருகிறது. அதேபோன்று, வடக்கு திசையில் 1500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றும் 500 மீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும், விமானம் விழுந்த தொழிற்சாலையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் மனைப்பிரிவு ஒன்றும் உள்ளது.
அதில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தொழிற்சாலையில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். விமானம் விழுந்த இடத்தில் இருந்து 20 அடி தூரத்தில் தொழிற்சாலை மீது விழுந்து இருந்தால் தொழிற்சாலை முழுவதும் எரிந்து சாம்பலாகி இருக்கும். அனைத்து தொழிலாளர்களின் உயிருக்கும் பெரும் ஆபத்து நேர்ந்திருக்கும். ஆகவே, பயிற்சி விமானங்கள் இனி தங்களின் வான்வெளி பயிற்சி பாதையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
* மீட்கப்பட்ட கருப்புப்பெட்டி
விமானம் விழுந்த இடத்தில் நேற்று காலை முதலே விமானப்படையினர் சோதனையை தொடங்கி நடத்தி வந்தனர். விமானத்தின் எஞ்சின் மற்றும் கருப்புப் பெட்டியை மீட்பதில் தொடர் சிக்கல் ஏற்பட்ட நிலையில், பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் சுமார் 10 அடி ஆழத்திற்கு சேறு அகற்றி வெளியே கொட்டப்பட்டது. பகல் 12 மணியளவில் விமானத்தின் முக்கிய பாகமான கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது. அதை பாதுகாப்பாக விமானப்படையினர், பேக்கிங் செய்து எடுத்துச்சென்றனர். தொடர்ந்து, விமான இன்ஜினை மீட்கும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.


