திருப்போரூர்: திருப்போரூர், திருவஞ்சாவடி தெருவில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த, 2007ம் ஆண்டு கட்டப்பட்டு, திறக்கப்பட்ட இந்த மீன் மார்க்கெட் கட்டிடத்தை திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இங்கு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செம்மஞ்சேரி, புதிய கல்பாக்கம், நெம்மேலி, சூளேரிக்காடு, பட்டிப்புலம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ பெண்கள், மீன்களை எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர். அவர்களிடமிருந்து குறைந்த வாடகை தொகையாக 30 ரூபாய் தினசரி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்காக, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு இந்த தொகை வசூல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக இந்த மீன் மார்க்கெட் கட்டிடம் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கடந்த ஜூன் மாதம் தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மீன் மார்க்கெட் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு, வண்ணம் பூசப்பட்டது. அதேபோன்று, மீன் மார்க்கெட்டை ஒட்டி உள்ள கழிப்பறைக்கும் வண்ணம் பூசப்பட்டது. ஆனால், இதுவரை மீன் மார்க்கெட்டில் உள்ள குழாய்களில் தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை, மீன் மார்கெட் கட்டிடத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் செல்ல வழி செய்யாததால் போர்வெல் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த, வளாகத்தில் மீன் விற்பனை செய்ய வரும் வியாபாரிகள் அனைவருமே பெண்கள் என்பதால், கழிப்பறை வசதி அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. கழிப்பறைக்கு வண்ணம் பூசப்பட்டுள்ளதே தவிர, அதில் தண்ணீர் வசதி செய்யப்படவில்லை. மேலும் கழிப்பறை பூட்டப்பட்டு, அதன் சாவி பேரூராட்சி நிர்வாகத்தின் வசம் உள்ளது. போதிய தண்ணீர் வசதி இல்லாததால், மீன் மார்க்கெட் வளாகம் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், காலை முதல் மாலை வரை மீன் மார்க்கெட்டின் இரு பக்க கிரில் கதவுகளும் பழுதடைந்து திறக்கவும், மூடவும் முடியவில்லை. இதனால் முற்றிலும் திறந்து கிடப்படதால் கெட்டுப்போன மீன்களையும், கீழே விழும் மீன்களையும் எடுத்து தின்பதற்காக தெரு நாய்கள் மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ளே சுற்றுகின்றன. அவற்றின் கழிவுகளும் மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ளே நிரம்பி கிடக்கின்றன. இவற்றை சுத்தம் செய்யும் பணி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மீன் விற்கும் பெண்களே அருகில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து சுத்தம் செய்து கொள்கின்றனர். ஆகவே, திருப்போரூர் மீன் மார்க்கெட் வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றும், அருகில் உள்ள கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


