சென்னை: திருப்போரூர் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் கார் விபத்தில் ஏர்பேக் திறந்து முகத்தில் மோதியதில், முன்பக்கம் இருந்த 7 வயது சிறுவன் உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த வீரமுத்து, தனது மனைவி மற்றும் 7 வயது மகன் கவின் உள்பட 5 பேர் வாடகை காரில் சென்னை சென்று கொண்டிருந்தார். அந்த வாடகை காரை விக்னேஷ் என்பவர் ஓட்டிவந்துள்ளார். முன்னால் சென்ற சுரேஷ் என்பவரின் கார், திடிரென இடதுபுறம் திரும்பியதால், வீரமுத்து சென்ற வாடகை கார் மோதி விபத்து ஏற்பட்டு ஏர்பேக் வெடித்துள்ளது.
இதில் முன் சீட்டில் தந்தை மடியில் அமர்ந்திருந்த சிறுவன் கவின் முகத்தில் ஏர்பேக் ஓபன் ஆகி வேகமாக அடித்ததில் காயம் ஏற்பட்டது மயங்கியுள்ளார். உடனே அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்த கவினை மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவினை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் தகவலறிந்த திருப்போரூர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.