Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பரங்குன்றம், பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்

பழநி: திருப்பரங்குன்றம், பழநி மலைக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில், முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடாக அழைக்கப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி திருவிழா, இன்று பகல் 12 மணிக்கு மேல் உச்சிகாலத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி மூலவர், சின்னக்குமாரர், வள்ளி-தெய்வானை சமேத சண்முகர், வீரபாகு, நவவீரர்கள், மயில், சேவல், தீப ஸ்தம்பம் மற்றும் கோயில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர். விழா நடைபெறும் நாட்களில் சண்முகர் தீபாராதனை நடைபெறும். முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெறும்.

அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தொடர்ந்து விஸ்வரூப பூஜை, விளா பூஜையும் நடைபெறும். இதனைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு சின்னக்குமார சுவாமி அசுரர்களை வதம் செய்யும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறும். இதன்பின்பு, கோயில் நடை அடைக்கப்படும். இதன்பின்பு, கிரிவீதியில் வடக்கு கிரிவீதியில் தாராகசூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் சூரனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகார சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெறும்.

இதனைத்தொடர்ந்து 28ம் தேதி மலைக்கோயிலில் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தனுசு லக்னத்தில் வள்ளி-தெய்வானை சமேத சண்முகர் திருக்கல்யாண நிகழ்வு நடைபெறும். இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ரிஷப லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாடுகளை பழநி கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பிரமணியன் தலைமையிலான அறங்காவலர் குழுவினர், இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் 5 ஆயிரம் பேர் விரதம்

முருகனின் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று காலை காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. 27ம் தேதி சூரசம்ஹாரம், மறுநாள் (அக்.28) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று முதல் பக்தர்கள் விரதம் தொடங்கினர். இதற்காக நேற்று கோயிலில் திருவாச்சி மண்டபம், ஆஸ்தான மண்டபம் உள்ளிட்ட கோயில் பிரஹாரங்கள் அன்னதானம் மடம் எதிரேயுள்ள செட்டில் பக்தர்கள் தங்க இடம் பிடித்தனர். சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் வரை, 27ம் தேதி வரை கோயிலில் தங்கி விரதமிருந்து முருகனை வழிபட உள்ளனர். இதேபோல ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலிலும் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது.