திருப்பரங்குன்றம் மலையில் பல இடத்தில் தீபம் ஏற்றுவது மத நம்பிக்கையை புண்படுத்தும் தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு, சமூக அமைதி பாதிப்பு: தடுப்புகள் உடைப்பு, போலீஸ் மீது தாக்குதல்; மேல்முறையீட்டு மனுவில் தமிழ்நாடு அரசு வாதம்
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம.ரவிக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட கோரியிருந்தார். இவ்வழக்கில் கடந்த 1ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு காவல்துறை தரப்பில் உரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால் ராம.ரவிக்குமார் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், மனுதாரர் 10 பேருடன் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து மதுரை கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ரவீந்திரன், வீராகதிரவன் ஆகியோர் ஆஜராகி, ‘‘தனி நீதிபதி நேற்று முன்தினம் மாலை 6.05 மணிக்கு விசாரித்தபோது, தீபம் ஏற்றப்பட்டதா, இல்லையா என்றார்.
மனுதாரர் தரப்பு இல்லை என்றது. இதையடுத்து நீதிபதி உடனடியாக சிஐஎஸ்எப்பை அழைத்து உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக விசாரிக்கலாம். விளக்கம் கேட்கலாம். ஆனால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தனி நீதிபதி நீதித்துறை விதிகளை மீறி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவு என்பது சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தான் இருக்க வேண்டும். கடந்த 1862ம் ஆண்டு நடந்த வழக்கில் இல்லாததை தற்போது உத்தரவிட முடியாது. நூறு ஆண்டுக்கும் மேலாக உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. ஒரு இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும்.
பல இடத்தில் தீபம் ஏற்றுவது மத நம்பிக்கையை புண்படுத்தும். அவமதிப்பு வழக்கிற்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இது சட்டமீறல். அரசு அப்பீல் செய்யவில்லை என்பது தவறு. உடனடியாக மனு செய்யப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்பீல் செய்ய 30 நாள் அவகாசம் உள்ளது. தொடக்க நிலையிலேயே நீதிமன்ற அவமதிப்பு நடந்துள்ளதாக நீதிபதி முடிவுக்கு வந்துள்ளார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிராக நடந்துள்ளார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டது. சமூக அமைதியை பாதித்துள்ளது. தடுப்புகள் உடைக்கப்பட்டுள்ளன. போலீசார் தாக்கப்பட்டுள்ளனர்.
போதுமான வீடியோ ஆதாரம் உள்ளது. மனுதாரர் மீதே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த காலகட்டத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியாது. மத பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது. சிஐஎஸ்எப் கமாண்டன்ட்டுக்கு தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிஐஎஸ்எப் ஒரு போலீஸ் பிரிவு அல்ல. நீதிமன்ற வளாக பணியில் மட்டுமே அவர்கள் ஈடுபட முடியும். நீதிபதி மாலை 5 மணிக்கு விசாரித்து திட்டமிட்டே உத்தரவிட்டுள்ளார். சட்டம், ஒழுங்கு பாதித்ததால் பிஎன்எஸ் 163 தடை உத்தரவு (144) பிறப்பிக்கப்பட்டது. நீதித்துறை நலன், பொதுமக்கள் மற்றும் பொது அமைதிக்கான நலன் கருதி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நூறாண்டுக்கும் மேலாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தான் தீபம் ஏற்றப்படுகிறது.
அவர்கள் தர்கா அமைந்துள்ள பகுதியில் ஏற்ற முயற்சிக்கின்றனர். ரிட் மனுவில் தர்கா தரப்பை சேர்க்கவில்லை. ஓரிரு நாள் கூட அவகாசம் தரவில்லை. ஏற்கனவே கார்த்திகை தீபம் ஒரு இடத்தில் தான் ஏற்றப்படுபடுகிறது. ஏன் மற்றொரு இடத்தில் ஏற்ற வேண்டும்?. உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதி தீபத்தூணில் ஏற்றுவது தான் சரியானது. திருவண்ணாமலை போன்ற முக்கிய இடங்களில் ஒரு இடத்தில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய வாய்ப்பு வழங்காமல், தனி நீதிபதி, அவமதிப்பு மனுவின் மீது முடிவெடுத்துள்ளார். தர்காவும் அதன் பிரதிநிதிகளும் மட்டுமே பாதிக்கப்பட்ட தரப்பினர் என தனி நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
டிச. 1ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அப்பீல் செய்ய உள்ளதாக கோயிலின் நிர்வாக அதிகாரி சார்பில் கூறியும் கோயில் தரப்பை, பாதிக்கப்பட்ட தரப்பினர் அல்ல என்ற முடிவுக்கு தனி நீதிபதி வந்துள்ளார். மேல்முறையீடு செய்ய கோயில் தரப்புக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது. அப்படியிருக்கும் போது, நீதிமன்ற அவமதிப்பு மனுவை ஏற்றுக்கொண்டு, உத்தரவை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது, ரிட் மனு மீதான உத்தரவை எதிர்த்து மனு செய்ய வாய்ப்பளிக்காதது ஆகும். மனுதாரரை தீபம் ஏற்ற அனுமதிப்பது முற்றிலும் தவறானது. இது நீதிமன்ற அவமதிப்பு மனுவின் எல்லைக்கு அப்பாற்பட்டது. அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்ற கருத்து உண்மையில் தவறானது. அரசு மேல்முறையீடு செய்துள்ளது பதிவுத் துறையில் நிலுவையில் உள்ளது.
தனி நீதிபதியின் உத்தரவு சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகள் 129 மற்றும் 215 ஆகியவை வேண்டுமென்றே உத்தரவை நிறைவேற்றவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் தான், தண்டனை வழங்கும் அதிகாரத்தை உயர்நீதிமன்றத்திற்கு கொடுத்துள்ளது. அவமதிப்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் விதமும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது. மனுதாரரை மலை உச்சிக்குச் சென்று தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிப்பது, முந்தைய தீர்ப்புகளுக்கு முரணானது. கோயில் அதிகாரிகள் மட்டுமே பொருத்தமான இடத்தில் தீபம் ஏற்ற அனுமதித்துள்ளது.
மூன்றாம் தரப்பினர் மலைப்பகுதியில் எங்கும் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படக்கூடாது. மனுதாரர் மலை உச்சியில் சென்று விளக்கை ஏற்ற அனுமதித்த உத்தரவு நீதிமன்றத்தின் வரம்பைத் தாண்டிச் சென்றது மட்டுமின்றி, சிஐஎஸ்எப் வீரர்களுடன் மனுதாரர் மற்றும் அவருடன் செல்வோருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளார். இது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்புக்கும், அதிகாரத்திற்கும் அப்பாற்பட்டது. சிஐஎஸ்எப் பாதுகாப்பு என்பது நீதிமன்ற வளாகத்திற்கானது. இவர்களை எப்படி காவல் துறையினரின் பணி எல்லைக்குள் பயன்படுத்த முடியும்.
சிஐஎஸ்எப் வீரர்களை வைத்து கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடுவது நீதித்துறை அத்துமீறலாகும். உயர் நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு விதிகளை பின்பற்றாமல் தனி நீதிபதி அவசரமாக அவமதிப்பு மனுவை ஏற்றுக்கொண்டார். தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பின் நிலைத்தன்மையை பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆய்வு செய்ய வாய்ப்பளிக்காமல், அவமதிப்பு மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது டிவிஷன் பெஞ்சின் அதிகார எல்லைக்குள் தலையிட்டு ரிட் அப்பீல் மனுவை பயனற்றதாக்குவதற்குச் சமம்’’ என்றனர்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தனி நீதிபதி மீதான குற்றச்சாட்டு புறக்கணிக்கப்பட வேண்டும். தீபத்தூணில் விளக்கு ஏற்றாதது மனுதாரரின் உரிமையை தோற்கடிக்க வாய்ப்புள்ளது. தனி நீதிபதி உடனடியாக உத்தரவிடவில்லை. தீபம் ஏற்றுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று கூறியுள்ளனர். மாலை 6.05 மணி வரை இந்த விஷயத்தை கடந்து சென்றதால், தனது உத்தரவை நிறைவேற்ற தவறிவிட்டார் என்பதை உறுதிசெய்த பிறகு, ரிட் மனுவில் கேட்ட மாற்று நிவாரணத்தை அவர் வழங்கியுள்ளார். மனுதாரருக்கு தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது மற்றும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்க கூறியுள்ளார். உயர் நீதிமன்றம், உள்ளூர் காவல்துறையைத் தவிர வேறு உடனடி சீருடைப் படையை நாட வேண்டும் என்பதால் சிஐஎஸ்எப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலெக்டரின் தடை உத்தரவு பொருந்தாது.
தீபத்தூண் என்று அழைக்கப்படும் கல் தூணில் விளக்கை ஏற்றி வைக்க மனுதாரர்களுக்கு அனுமதி அளித்துள்ளார். எண்ணற்ற மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருப்பதால், அரசு வேண்டுமென்றே உத்தரவை செயல்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தனி நீதிபதி முடிவுக்கு வந்துள்ளார். மாநில காவல்துறை நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில், மத்திய படையின் உதவியைப் பெறுவது சட்டவிரோதம் இல்லை. எனவே, அவமதிப்பு நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் மறைமுக நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.
* நூறாண்டுக்கும் மேலாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தான் தீபம் ஏற்றப்படுகிறது. அவர்கள் தர்கா அமைந்துள்ள பகுதியில் ஏற்ற முயற்சிக்கின்றனர்.
* சிஐஎஸ்எப் வீரர்களுடன் மனுதாரர் மற்றும் அவருடன் செல்வோருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளார். இது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்புக்கும், அதிகாரத்திற்கும் அப்பாற்பட்டது.
* ஏற்கனவே கார்த்திகை தீபம் ஒரு இடத்தில் தான் ஏற்றப்படுபடுகிறது. ஏன் மற்றொரு இடத்தில் ஏற்ற வேண்டும்?. உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதி தீபத்தூணில் ஏற்றுவது தான் சரியானது.
* மேல்முறையீடு செய்ய கோயில் தரப்புக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது. அப்படியிருக்கும் போது, நீதிமன்ற அவமதிப்பு மனுவை ஏற்றுக்கொண்டு, உத்தரவை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது, ரிட் மனு மீதான உத்தரவை எதிர்த்து மனு செய்ய வாய்ப்பளிக்காதது ஆகும்.
உச்ச நீதிமன்றத்தில்
தமிழ்நாடு அரசு
மேல்முறையீடு: திங்கள்கிழமை விசாரணை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ‘திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் எங்களது கோரிக்கையை உயர்நீதிமன்றம் சரியான முறையில் கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு, அவசர வழக்காக வரும் திங்கள்ட்கிழமை அல்லது அதற்கு மறுநாள் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், மனுதாரர் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியேட் முழு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீபம் ஏற்ற எடப்பாடி ஆதரவு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்த தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ‘எம்மதமும் சம்மதம்’ - எம் மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்னைக்கு வழிவகுத்த அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

