திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மோதல்: இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேர் கைது
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மோதல் தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் கைதுசெய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
100 ஆண்டுகள் மரபுப்படி அரசு சார்பில் உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில்தான் தீபம் ஏற்றியதை கண்டித்து, இந்து அமைப்பினர், பாஜவினர் முற்றுகை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் தடையை மீறி மலை ஏற முயன்றனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்றப்பட்டது.
அப்போது இந்து அமைப்பினர், பாஜவினர் தாக்கியதில் 2 போலீசார் மண்டை உடைந்தது. மயக்க நிலைக்குச் சென்ற அவர்களை சக போலீசார் மற்றும் அங்கிருந்த மக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரை தாக்கி விட்டு, ‘பாரத் மாதா கீ ஜே’ என கோஷமிட்டவாறு மலை மீது ஏற முயன்ற இந்து அமைப்பினர், பாஜவினரை போலீசார் தடுத்தனர்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை பாதுகாத்திடும் வகையில் மறு உத்தரவு வரும் வரை உடனடியாக 144 தடை உத்தரவை அமல்படுத்தி கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் நேற்று நட்நத மோதல் தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி கூடுவது, பொது சொத்தை சேதப்படுத்துதல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

