Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருப்பரங்குன்றம் அருகே 1000 ஆண்டுகளை கடந்த சண்டிகேஸ்வரர் சிற்பம்

*அம்மனாக வழிபடும் கிராம மக்கள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் அருகே கிராமத்தின் கண்மாய்க்கரையில், 1000 ஆண்டுகளை கடந்த சண்டிகேஸ்வரர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இப்பகுதி மக்கள் அலங்காரி அம்மன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் அருகில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில், தென்னகப் பண்பாட்டு ஆய்வு மைய ஆய்வாளர்கள் முனைவர் மீனாட்சி சுந்தரம், கோபி, மாரீஸ்வரன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சண்டிகேஸ்வரர் சிற்பம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சண்டிகேஸ்வரர் சிற்பங்கள், பொதுவாக சிவன் கோயில்களில் இருக்கும். ஆனால் நெடுங்குளம் கிராமத்தில் கண்மாய்க் கரையோரம் மண்ணில் புதைந்த நிலையில் காணப்படும் இச்சிற்பம் இரண்டரை அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டதாக உள்ளது.

பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள இதில், தலைப்பகுதி அகன்று விரிந்த ஜடாபாரத்துடனும், காதுகளில் வட்ட வடிவ பத்திர குண்டலங்களும் உள்ளன. கழுத்தில் ஆபரணங்கள் செதுக்கப்பட்டுள்ளது. வலது கரத்தில் மழுவும், இடது கரத்தை இடது காலில் வைத்தபடியும் அமர்ந்த நிலையில் இச்சிற்பம் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

இதன் வடிவமைப்பு அடிப்படையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்ததாக கருதலாம். இச்சிற்பத்தை இப்பகுதி மக்கள் அலங்காரி அம்மன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். விசேஷ காலங்களில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடுகளும் நடத்துகின்றனர். இப்பகுதியில் முறையான ஆய்வு பணிகள் நடைபெற்றால் முற்கால பாண்டியர் கால தடயங்களை கண்டறிய வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினர்.