Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பரங்குன்றம் வழக்கில் உத்தரவு பிறப்பித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : திருமாவளவன்

சென்னை : ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் : என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றிய திருப்பரங்குன்றம் பொதுமக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் பயங்கரவாதிகள் தொடர்ந்து வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தை விட்டு விட்டு, வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள். அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி சுமூகமான முறையில் தீபத் திருவிழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது.

இந்நிலையில் அங்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு வெளியூர்களில் இருந்து வந்த சனாதனப் பயங்கரவாதக் கும்பல் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு பொதுச் சொத்துகளையும் நாசப்படுத்தியது. கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

திருப்பரங்குன்றத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்த நிலையில் அங்கு வன்முறையைத் தூண்டும் விதமாக தீபம் ஏற்றுவதற்குப் பயங்கரவாதிகளை அனுமதித்தது மட்டுமின்றி அவர்களுக்குத் துணையாக உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்பியுள்ளார். இது அப்பட்டமான அதிகார மீறல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கும், வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு விதிகள் ) சட்டம் 1991 க்கும் எதிரானதாகும்.

இப்படி சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதோடு, நேற்று முழுவதும் மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தேவையில்லாத சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மட்டுமல்லாது பல்வேறு பிரச்சனைகளிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகத் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.