சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் ‘‘காட்டுமன்னார் கோவில் வட்டத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டுள்ள முஷ்ணம் வட்டத்திற்கும், காவிரி டெல்டா பகுதிக்காக செயல்படுத்தப்படும் சிறப்புத்திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில், முஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும்” என்று அறிவித்தார்.
இதை தொடர்ந்து திருமுட்டம் வருவாய் வட்டத்தைச் சார்ந்த 38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து கடந்த 21ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காவிரி பாசனப்பரப்பிற்கு அளிக்கப்படும் குறுவை சிறப்புத்திட்டம் உள்ளிட்ட சிறப்புத்திட்டங்கள் அனைத்தும் அப்பகுதி கடைக்கோடி விவசாயிக்கும் கிடைக்கும்.
இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் வட்டத்திலுள்ள திருமுட்டம் வருவாய் வட்டத்தைச் சார்ந்த 38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அப்பகுதி உழவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைந்திட உத்தரவிட்டமைக்காக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலையில் காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் மற்றும் அப்பகுதி உழவர் பெருமக்கள் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்தனர்.

