Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள்; ராகுல் காந்தி வாழ்த்து: நலத்திட்ட உதவி வழங்கல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கட்சியினர், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி: திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அனைவரும் கண்ணியம், சம உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புக்காக நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்போம்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்:

ஒடுக்கப்படுகிற மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் சித்தாந்தக் கல்வியைப் புகட்டி, அரசியல்மயப்படுத்தி, ஜனநாயக வழியில் அதிகாரத்தை அடையச் செய்யும் அண்ணல் அம்பேத்கரின் செயல் திட்டத்துக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட களப்பணியாளர், எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், என் உடன் பிறவாச் சகோதரர் திருமாவளவனின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்ந்தேன். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாளையொட்டி திருமாவளவன் சென்னை காமராஜர் அரங்கில் நடந்த விழாவில் தொண்டர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக்கை வெட்டி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கினார். விழாவில் கமல்ஹாசன் பங்கேற்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது விசிக துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ சார்பில் தங்கம் முலாம் பூசப்பட்ட ஒரு கிலோ வெள்ளி செயினை கமல்ஹாசன் திருமாவளவனுக்கு அணிவித்தார். மேலும் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ ரூ.5 லட்சம் தேர்தல் நிதியையும் வழங்கினார்.

விழாவில் பொதுச்செயலாளர் ம.சிந்தனைச் செல்வன், துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, எம்எல்ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு, முதன்மைச் செயலாளர் ஏ.சி. பாவரசு, தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம், செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன், மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.பன்னீர்தாஸ். 190-வது வட்ட செயலாளர் சிட்டு (எ) ஆமோஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.