கோவை: கோவை வரதராஜபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில் உண்மை வெளியே வரும். திருமாவளவன் கார் டூவிலரை அடிப்பது வீடியோவில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஆனால் அந்த நபருக்கு பின்னால் நான் இருப்பதாக திருமாவளவன் கூறுகிறார். திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வர வேண்டும். வன்முறை அரசியலால் யாருக்கு லாபம்? உருட்டல் மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம். ஒரு அடி அடித்தால் இரண்டு அடி அடிக்கும் ஆள் நான். போலீசில் இருந்து பல ரவுடிகளை பார்த்து வந்தவன் நான். இந்த வேலை எல்லாம் என்னிடம் வைத்து கொள்ளாதீர்கள். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* செங்கோட்டையனுடன் ஒரே விமானத்தில் பயணம்
அண்ணாமலை கூறுகையில், ‘விஜய்க்கு நாங்கள் ஆதரவு தர வேண்டிய அவசியம் இல்லை. விஜய் சித்தாந்தம் வேறு. எங்கள் சித்தாந்தம் வேறு. அவர் மீது அரசியல் சாயம் பூசுவது அழகு அல்ல. நான் பயணித்த விமானத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வந்திருந்தார். நான் புக் படித்துக் கொண்டிருந்தேன். அவர் உறங்கிவிட்டார். இதற்கு விமான பணிப்பெண்கள் சாட்சி. எந்த அரசியலும் நாங்கள் பேசவில்லை’ என்றார்.