தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி
சென்னை: தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து நன்றி தெரிவித்தார். தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் திருமாவளவன் சந்தித்தார்.
சபாநாயகர் அப்பாவு அறிவித்த படி இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி: சாதி பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்காக முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம். சில சாதிகளின் பெயர்களில் 'ன்' விகுதியை நீக்கிவிட்டு 'ர்' சேர்க்க வலியுறுத்தினோம். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கேட்டுக்கொண்டோம். கடந்த காலங்களில் சாதி பெயர்களுடன் சில ஊர்கள் இடம்பெற்றுவிட்டன. வரும் காலங்களில் எந்த ஊர் இடங்களுக்கும் சாதி பெயர் இருக்கக் கூடாது.
கடந்த காலங்களில் சில தலைவர்களின் பெயர்கள் சாதி பெயர்களுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவை புழக்கத்திற்கு வந்து அவை நிலைபெற்று விட்டன. உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்று தான் நாம் சொல்லுவோம். ஆனால் அவர் சாதி ஒழிப்பு அரசியலை முன்னெடுத்தவர். சாதி ஒழிய வேண்டும் என்று குரல் கொடுத்தவர். ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். தந்தை பெரியார் கூட தான் வாழும் காலத்திலேயே ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற பெயரில் இருந்த சாதியை நீக்கி அதிகாரப்பூர்வ அறிவித்தார். ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த அடையாளத்தை பின்பற்றுவதால் சாதியை ஆதரிப்பதாக ஆகாது.