திருமங்கலம்: திருமங்கலம் அருகே அரசு ஐடிஐ மாணவனை விடுதியில் நிர்வாணப்படுத்தி அதனை வீடியோ எடுத்து ராகிங் செய்த 3 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதுதொடர்பாக வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே செக்கானூரணியில் உள்ள அரசு ஐடிஐயில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவர்களின் வசதி கருதி செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஐடிஐ மாணவர்களுக்கு தனியாக விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
கடந்த 18ம் தேதி விடுதியில் தங்கியிருந்த தேனி மாவட்டம், மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த 15 வயது மாணவனை, அதே விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்கள் 3 பேர், உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி ராகிங் செய்து தாக்கியுள்ளனர். அதை வீடியாவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட மாணவன், தனது ஊருக்கு சென்று பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவனின் தந்தை, நேற்று முன்தினம் இரவு, செக்கானூரணி போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப் பதிந்து, ராகிங் செய்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மதுரை அச்சம்பத்து, கள்ளிக்குடி அருகே வில்லூர், தேனி அருகே கோட்டூரை சேர்ந்த 17 வயது மாணவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும், கவனக்குறைவாக இருந்ததாக கூறி விடுதி வார்டனான உசிலம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (40), கள்ளர் சீரமைப்புத்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.