Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

திருமங்கலம் பகுதியில் போதை பொருள் விற்றதாக சட்ட கல்லூரி மாணவன் உள்பட 4 பேர் கைது: ரூ.27.5 லட்சம், சொகுசு கார் பறிமுதல்

அண்ணாநகர்: திருமங்கலம் சுற்று வட்டார பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகர போதை பொருள் தடுப்பு பிரிவு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் திருமங்கலம் பகுதியில் போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது, பாடியை சேர்ந்த தியானேஸ்வரனை (26) கைது செய்து 4 போதை ஸ்டாம்புகள், பைக், 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் தியானேஸ்வரனை திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தியானேஸ்வரன் தெரிவித்த தகவலையடுத்து சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பட்டதாரி சர்புதீன் (44), வளசரவாக்கத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி சரத் (30), சட்டக்கல்லூரியில் படித்து வரும் முகப்பேரை சேர்ந்த சீனிவாசன் (27) ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கு தியானேஸ்வரன் போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாகவும், அவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் விற்றுள்ளனர். இதையடுத்து சர்புதீன் வீட்டில் சோதனை செய்தனர். பின்னர் அவரது காரில் இருந்து ரூ.27.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் சொகுசு காரும் கைப்பற்றப்பட்டது. சீனிவாசன் வீட்டில் 10 கிராம் ஓ.ஜி கஞ்சா கைப்பற்றப்பட்டது. சரத் வீட்டில் எதுவும் சிக்கவில்லை.

இவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் சர்புதீன், சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பனியில் ஊழியராக வேலை செய்து வருவதும், சர்புதீனின் காரில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் ரூ.27.5 லட்சம் தனியார் கம்பெனியின் உரிமையாளர் கொடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தனியார் கம்ெபனி உரிமையாளர் ஹரிஷ் மற்றும் இவரது நண்பர் சாய் ஆகியோரை விசாரணைக்காக திருமங்கலம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

இதையறிந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறப்பினர் தி.நகர் சத்யா தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போதுதான், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஹரிஷ் அதிமுக பிரமுகர் என்பதும், அவரை விசாரணைக்கு அழைத்து வரவில்லை, ஜெஜெ.நகர் காவல் நிலையத்திற்கு சென்று பார்க்கும் படி போலீசார் கூறினர். இதையடுத்து அங்கு சென்று போலீசாரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் நொளம்பூர், அண்ணாநகர், அரும்பாக்கம் ஆகிய காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது. மேலும் ஹரிஷ், சாய் ஆகியோரை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அண்ணாநகர் துணை ஆணையர் மற்றும் திருமங்கலம் உதவி ஆணையர் இரவும் முழுவதும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர் என்றுகூட தெரியாமல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அண்ணாநகர் துணை ஆணையர் அலுவலகம் மற்றும் திருமங்கலம், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர், அரும்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களை முற்றுகையிட்ட சம்பவம் பெரும்பரப்பை ஏற்படுத்திள்ளது.