நம்பியாற்றில் தண்ணீர் வற்றியதால் வெப்பத்தை தணிக்க திருக்குறுங்குடி கோயில் யானைகளுக்கு ‘ஓஸ்’ பைப் குளியல்
*தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிப்பாட்டும் பாகனங்கள்
களக்கா : நம்பியாற்றில் தண்ணீர் வற்றியதால், திருக்குறுங்குடி கோயில் யானைகளை, பாகன்கள் ஓஸ் பைப் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து குளிப்பாட்டி வருகின்றனர்.களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் குறுங்குடி வள்ளி (33), சுந்தர வள்ளி (22), ஆகிய 2 யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. கோயில் விழாக்களில் முக்கிய பங்கு வகிக்கும் 2 யானைகளுக்கும் தனித்தனியாக இருப்பிடங்கள் உள்ளது.
மேலும் இயற்கையான சூழலை ஏற்படுத்துகிற வகையில் திருக்குறுங்குடி - ரோஸ்மியாபுரம் ரோட்டில் மலையடிவாரத்தையொட்டி மற்றொரு இருப்பிடமும் உள்ளது. யானைகளை பராமரிப்பதற்கு 2 பாகன்கள் குடும்பத்துடன் அங்கேயே தங்கியிருந்து யானைகளை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருக்குறுங்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை பெய்யாததால் நீர்நிலைகள் எல்லாம் வறண்டு வருகிறது.
கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் யானைகள் தினசரி குளிக்கும் நம்பியாற்றிலும் தண்ணீர் வற்றியது. இதையடுத்து யானைகளை கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள குளியல் தொட்டியில் பாகன்கள் குளிப்பாட்டி வருகின்றனர். குளியல் தொட்டிக்கு ஆழ்துளை கிணறு மூலம் தினசரி தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. அத்துடன் ஓஸ் பைப் மூலமும் தண்ணீரை பீய்ச்சியடித்து யானைகளை குளிர்வித்து வருகின்றனர்.
யானைகள் தும்பிக்கையில் தண்ணீரை பிடித்து வைத்துக் வைத்து கொண்டு தலையில் ஊற்றியவாறு உற்சாகமாக குளியல் போடுகின்றன. ஒரு யானை குளிப்பதற்கு 2 மணி நேரம் வரை ஆகிறது. அதன் பின் கொசு, பூச்சிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும், கால்களில் அரிப்பு ஏற்படுவதை தடுக்கவும் யானைகளுக்கு வேப்ப எண்ணெய் தடவப்படுகிறது.
வைக்கோல், சோளத்தட்டை, சத்துருண்டை உள்பட பல்வேறு சத்துணவுகள் கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறையினரின் அறிவுரைப்படி யானைகளுக்கு உணவாக வழங்கப்பட்டு வருகிறது. தினசரி யானைகளை நடைபயிற்சிக்கும் அழைத்து செல்கின்றனர். யானைகளுக்கு பக்தர்கள் தேங்காய், பழம் உள்ளிட்ட உணவுகள் வழங்க அனுமதியில்லை. யானைகளுக்கு நோய் தாக்கம் மற்றும் வெயிலின் தாக்கம் ஏற்படாதவாறு கண்காணித்து வருகின்றனர்.