Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருக்கோவிலூர் அருகே பரிதாபம் டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து 4 பெண்கள் உள்பட 5 பேர் சாவு

திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த தேவனூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் மாதவன் (44). இவர் விழுப்புரம் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு காரில் நேற்று காலை புறப்பட்டுள்ளார். காரை மாதவன் ஓட்டினார்.

காரில் அவரது மனைவி மேனகா (35) மற்றும் உறவினர் சிவசங்கர் மனைவி சங்கீதா (30), மகள் கோசிகா (2), பாலகிருஷ்ணன் மனைவி சுபா (55), ராமகிருஷ்ணன் மனைவி தனலட்சுமி (70), முருகானந்தம் மகன் ராகவேந்திரன் (13), கருணாநிதி மனைவி சாந்தி (65), பூமாரி கிராமத்தை சேர்ந்த சங்கர் மகள் சரிதா (23), மகன் மோகன் (13) ஆகியோர் இருந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், அத்திப்பாக்கம் காட்டு கோயில் பகுதியில் சென்றபோது காரின் பின் டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையின் மீது மோதி, அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சங்கீதா, சுபா, தனலட்சுமி, ராகவேந்திரன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

போலீஸ்காரர் மாதவன், சாந்தி, மேனகா, கோசிகா, சரிதா, மோகன் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த மணலூர்பேட்டை போலீசார், அப்பகுதியினர் உதவியுடன் 6 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்க சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தால் திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.