Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருக்கோவிலூர் அருகே வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு எம்எல்ஏ நிவாரண உதவி வழங்கல்

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாலூர் கிராமத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள், கட்டிடங்கள் கட்டி கடந்த 30 ஆண்டுகளாக 144 குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 வருடத்துக்கு முன்பு தனிநபர் ஒருவர் நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை அகற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் விசாரணையின் அடிப்படையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் கடந்த 2 வருடமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் சாலை மறியல், போராட்டம் உள்ளிட்டவைகளை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங் ஆலோசனை பேரில் காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்.கார்த்திகேயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்ட தரப்பினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதை பொருட்படுத்தாத எம்எல்ஏ, பாதிக்கப்பட்ட 144 குடும்பங்களை அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் அமர வைத்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்த இடம் இருந்தால் அந்த பகுதியில் உடனடியாக வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கவும், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு அரசு சொந்தமான இடங்களில் பட்டா கொடுத்து, அந்த இடங்களில் வீடு கட்ட ஆணைகளை ஒரு வாரத்துக்குள் வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

மேலும் வீடுகளை இழந்த குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படாதவாறு அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக சொந்த செலவில் அவர்களுக்கு டெண்ட் அமைத்து தரப்படும் என்றதுடன், 3 மாதத்துக்கு வீடு கட்டும் வரை தங்கும் இடமும், 3 வேளை உணவும் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பணத்தை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்ய நாராயணன், திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் ரமேஷ் குமார், உளுந்தூர்பேட்டை சேர்மன் ராஜவேல், ஒன்றிய செயலாளர்கள் அரியூர் ராஜேந்திரன், செட்டித்தாங்கல் அய்யனார், பூமாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.