திருச்செந்தூர்: பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் இன்று காலை கடல் நீர் சுமார் 60 அடி தூரம் உள் வாங்கியது. இருந்தபோதிலும் பக்தர்கள் வழக்கம் போல கடலில் புனித நீராடினர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. எனவே இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் புண்ணியமாக கருதுகின்றனர். பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக கடலில் புனித நீராடி மகிழ்கின்றனர். அதன்பிறகே சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
வழக்கமாக இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் கடல் நீர் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். இந்நிலையில் இன்று (திங்கள்) பகல் 11.42 மணி மணி முதல் நாளை காலை 9.50 மணி வரை பவுர்ணமி உள்ளது. இதன் காரணமாக திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே இன்று காலை கடல் நீரானது சுமார் 60 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் பாசி படர்ந்த படி பச்சை நிறத்தில் பாறைகள் வெளியே தெரிந்தது. ஆனாலும் பக்தர்கள் வழக்கம் போல கடலில் புனித நீராடி, உள்வாங்கிய பாறைகளை செல்போனில் படமும் எடுத்து மகிழந்தனர்.