திற்பரப்பு அருவியில் 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை; தாமிரபரணி,கோதையாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிபாறை அணை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் வேகமாக நீர்மட்டம் உயர்ந்தது.
பேச்சுப்பாறை அணை முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, முதற்கட்டமாக 500 கனஅடி நீரும், தொடர்ந்து, 2,500 கனஅடி தண்ணீரும் உபரிநீராக திறந்துவிடபட்டது. இதன் காரணமாக கோதையாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஏற்பட்டது. நீச்சல் குளம், கல்மண்டபங்களை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதன் காரணமாக கடந்த 7 நாட்களாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாவட்டம் முழுவதும் சற்று மழை குறைந்தாலும் வெள்ளம் குறையவில்லை. மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நீடிக்கவாய்ப்புள்ளது. தாமிரபரணி, கோதையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
