Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புறவுலக சிந்தனையற்ற நபர்களுக்கான ஒப்புயர்வு மையம்: ஒரே குடையின் கீழ் ஆட்டிசம் குழந்தைகளுக்கு அனைத்து வகை சிகிச்சை

* 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன், உணர்திறன் பூங்கா விரைவில் தொடக்கம், அதிகாரிகள் தகவல்

சென்னை: உலகளவில், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் (Autism Spectrum Disorder - ASD) விகிதம் கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) 2023ம் ஆண்டு தகவல், 36 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது, இது 2000ம் ஆண்டில் 150 குழந்தைகளில் ஒருவர் என்ற விகிதத்திலிருந்து பெரும் உயர்வாகும்.

இந்தியாவில் அளவில் புள்ளிவிவரங்கள் இல்லை என்றாலும், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆட்டிசம் கண்டறியப்படுவது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்டறியும் திறன் மேம்பட்டதற்கு ஒரு சான்றாகும். ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு நரம்பு வளர்ச்சி கோளாறு ஆகும். இது மனிதர்களின் சமூக தொடர்பு, தகவல் தொடர்பு மற்றும் நடத்தை ஆகியவற்றில் பல்வேறு மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு நபருக்கும் அதன் தாக்கம் வேறுபடுகிறது - சிலர் சிறிய அறிகுறிகள் இருந்தால் சிகிச்சைக்கு பிறகு பொதுவான வாழ்வு வாழ முடியும். மற்றவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ தேவை மற்றும் ஆதரவு தேவைப்படுகிறது. ஆட்டிசம் சிகிச்சைக்கான சராசரி செலவு ஒரு மாதத்திற்கு ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம். இது சிகிச்சையின் வகை மற்றும் கால அளவைப் பொறுத்து மாறுபடும்.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் கடினம். இதை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை, கே.கே. நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்திற்குள் 15 கோடி ரூபாய் செலவில் புறவுலக சிந்தனையற்ற நபர்களுக்கான ஒப்புயர்வு மையம் (Centre for Excellence for the Persons with Autism Spectrum Disorder) அமைக்கப்பட்டது. இதை தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த மையத்தில் எவ்விதமான வழிகாட்டுதலும் இல்லாத பெற்றோர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக, ஒரே குடையின் கீழ் அனைத்து வகையான மறுவாழ்வு சிகிச்சைகள் கிடைக்கப்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆட்டிசம் கண்டறிதல், மதிப்பீடு செய்தல், அவர்களுக்கான சிறப்புக் கல்வி வழங்குதல், கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சி வழங்குதல், இயன்முறை/செயல்முறை சேவைகள், பகல்நேர பராமரிப்பு சேவைகள், தொழில் சார்ந்த பயிற்சி அளித்தல் மற்றும் உளவியல் போன்ற சேவைகளை அவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் பல்துறை வல்லுநர்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

இந்த மையம் தொடங்கப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இதுதொடர்பாக புறவுலக சிந்தனையற்ற நபர்களுக்கான ஒப்புயர்வு மையத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி ரெமா சந்திரமோகன் கூறியதாவது: இந்தியாவில் 80ல் இருந்து 100 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது. ஆட்டிசம் உள்ளவர்கள் வித்தியாசமாக இருப்பார்கள். அவர்களுக்கு என தனியாக ஒரு சொந்த உலகத்தை உருவாக்கி அதில் வாழுவார்கள். மற்றவர்களுடன் அவர்கள் பேசமாட்டார்கள். அவர்களுக்கு தேவை இருக்கும் போது கேட்பார்கள், அவ்ளோதான்.

மற்றபடி அவர்கள் தனியாக இருப்பார்கள். இந்த பிரச்னை எல்லாம் 1.5 வயதில் இருக்கும்போது நமக்கு தெரிய வரும்.  குழந்தைகளுக்கு பேச்சு பொறுமையாக வரும் என்றும் வீட்டில் இருக்கும் நபர்கள் கூறுவதை கேட்டு இருக்காமல் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுகின்றனர். அப்படி செல்வது சரியானது. இந்த பாதிப்பு உள்ள குழந்தைகள் சரியாக பேசமாட்டார்கள், உணர்ச்சியை புரிஞ்சிக்க முடியாதவர்கள், அவர்கள் தேவையை தெளிவாக சொல்ல தெரியாதவர்கள்.

நம் மையத்திற்கு குழந்தை வரும்போது குழந்தை மருத்துவர், மனநல மருத்துவர்கள் பரிசோதனை செய்வார். அடுத்ததாக உளவியலாளர் குழந்தையை பரிசோதனை செய்வார். அதில் ஆட்டிசம் பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகு சிகிச்சையாளரிடம் அனுப்புவார்கள். அவர்கள் அந்த குழந்தையை சரி செய்ய சிகிச்சை மற்றும் வகுப்புகள் மேற்கொள்வார்கள்.

அதனை தொடர்ந்து 3 மாதத்திற்கு ஒரு முறை மீண்டும் குழந்தையை மையத்திற்கு வர சொல்லி அடுத்தக்கட்ட சிகிச்சையை தொடங்குவோம். வெளியில் ஒரு முறை சிகிச்சை (section) எடுத்துக்கொள்ள ரூ.500 முதல் ரூ.1000 செலவு ஏற்படுகிறது. ஆனால் இங்கு அனைத்து இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது வரை 320 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம்.  அதுமட்டுமின்றி விரைவில் உணர்திறன் மற்றும் செயல் திறன் மேம்பாட்டு பூங்கா இந்த மையத்தில் தொடங்க உள்ளோம்.

அது குழந்தைகளை சுறுசுறுப்பாக வைத்து இருக்கும். 12 வயது வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது, ஆனால் அதற்கு அதிகமாக வந்தால் முதலுதவி செய்த பிறகு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவோம். இந்த மையத்தில் ஐடி அணி என தனியாக உள்ளது. அவர்கள் அனைத்து குழந்தைகளின் தகவல்களை வைத்து இருப்பார்கள். அத்துடன் வலைவழி கருத்தரங்கு பெற்றோர்களுக்கு நடத்துவார்கள். இதுவரை 10 சதவீத குழந்தைகள் சிகிச்சை முடிந்து பொது வாழ்க்கைக்கு சென்று உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

* பகல்நேர பராமரிப்பு மையம்

புறவுலக சிந்தனையற்ற நபர்களுக்கான ஒப்புயர்வு மையத்தில் பகல்நேர பராமரிப்பு மையம் உள்ளது. இது ஒரு என்ஜிஓவுடன் இணைந்து அனைத்து பணிகளும் மேற்கொள்ளுகிறோம். இதில் 2 சிறப்பு கல்வியாளர் இருப்பார்கள். காலை 9 மணிக்கு பெற்றோர்களுடன் வந்தால் 3 மணிவரை அவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். வயதுக்கு ஏற்றார் போல் அவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும்.

* யார் யார் இருப்பார்கள்? மனநல மருத்துவர், குழந்தை மருத்துவம், உளவியலாளர், உடற்பயிற்சி நிபுணர், தொழில்சார் சிகிச்சையாளர், பேச்சு சிகிச்சையாளர், சிறப்பு கல்வியாளர் ஆகியோர் இருப்பார்கள்.