Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திங்கள்நகர் பூங்கா முன்பு மழை நீர் ஓடை கான்கிரீட் திறப்புகளால் ஆபத்து

*கம்பிகளால் மூட வலியுறுத்தல்

திங்கள்சந்தை : நேசமணி பூங்கா முன்பு நடைபாதையில் திறந்து கிடக்கும் 23 ஓட்டைகளையும் கனமான கிரில் கம்பிகள் கொண்டு மூட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திங்கள்நகர் பேரூராட்சிக்கு சொந்தமான மார்சல் நேசமணி பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இதை அடுத்து அம்ரூத் 2023-24 திட்டத்தில் ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கும் பணிகள் நடந்தது.

இதனிடையே பூங்கா முன்புள்ள மழை நீர் ஓடையை சீரமைக்க தனியாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு மழைநீர் ஓடை பணிகள் முடிவடைந்தது. ஓடை மேலே கான்கிரீட் நடைபாதை போடப்பட்டு சில இடங்களில் மட்டும் திறந்த வெளியில் வலுவான இரும்பு கிரில்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 24 இடங்களில் 2 அடி சதுர அளவில் இடம் விடப்பட்டு திறந்த வெளியில் கிடக்கிறது. இந்த நடைபாதை பகுதி கிரில் கம்பிகளால் மூடப்படாததால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பூங்கா முன்புள்ள தலக்குளம் மற்றும் மணவாளக்குறிச்சி சாலை முக்கியமான சாலை என்பதால் இப்பகுதியில் மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் தினமும் நடந்தும் வாகனங்களிலும் இந்த வழியாக வந்து செல்கின்றனர்.

அதேபோன்று பஸ் ஸ்டாண்டில் இருந்து சந்தைக்கு நடந்து செல்பவர்களும் இந்த நடை பாதையையே அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நடந்து செல்பவர்கள் இந்த ஓட்டை வழியாக தவறி விழும் சம்பவம் நடந்து வருகிறது. குறிப்பாக இரவு மற்றும் மழை நேரங்களில் இந்த சம்பவம் அடிக்கடி நடக்கிறது என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

எனவே பொதுமக்கள், மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் முன் 23 திறந்தவெளி ஓட்டைகளையும் கனமான இரும்பு கிரில்கள் கொண்டு மூடி பாதுகாக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.

கனரக வாகனங்கள் திணறல்

திங்கள்நகர் நேசமணி பூங்கா முன்பு தலக்குளம் சாலையில் இருந்து மணவாளக்குறிச்சி திரும்பி செல்ல சாலை உள்ளது. பூங்கா முன்புள்ள மழை நீரோடை தலக்குளம் சாலையை ஆக்ரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் தலக்குளம் சாலையில் வரும் வாகனங்கள் குறிப்பாக கனரக வாகனங்கள் மணவாளக்குறிச்சி சாலைக்கு திரும்ப முடியாமல் திணறி வருகின்றன. 24 மணி நேரமும் அரசு பஸ்கள், லாரிகள், பள்ளி கல்லூரி வாகனங்கள் அதிக அளவில் வரும் சாலை என்பதால் இந்த சாலையை கனரக வாகனங்கள் திரும்பிச் செல்லும் வகையில் அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.