கலவை: திமிரி பிடிஓ அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் மாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் ஆரணி சாலையில் பிடிஓ அலுவலகம் உள்ளது. இதில் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட 55 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் தேவைக்காக மனு அளிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வருகின்றனர். பிடிஓ அலுவலகத்தில் பல்வேறு கோப்புகள், பொதுமக்களின் மனுக்கள் உள்ள நிலையில், சிசிடிவி கேமராக்கள் இல்லை.
வளாகத்திலும் கேமராக்கள் இல்லாததால், இதுவரை அலுவலகத்திற்கு வந்த பலரது வாகனங்கள் திருட்டுப்போய் உள்ளது. இதேபோல், பிடிஓ அலுவலக வளாகத்தில் அதிகளவு மாடுகள் சுற்றித்திரிவதால் மனு அளிக்க வர பொதுமக்கள் அச்சமடைகின்றனர். இதுகுறித்து பிடிஓ, மற்றும் துணை பிடிஓவிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட அதிகாரிகள் திமிரி பிடிஓ அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மாடுகளை வளாகத்திற்கு வராமல் தடுக்க வேண்டும், மேலும், மனுக்கள் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


