Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வழிமொழிகிறோம் பசும்பொன்னில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம் அமைக்கப்படும்: மரியாதை செலுத்திய பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

ராமநாதபுரம்: பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழாவுக்காக தேவர் நினைவாலயத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை வந்தார். அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். பிறகு தேவர் நினைவு இல்லம் சென்ற அவர், அறங்காவலர் காந்திமீனாள் நடராஜன் மற்றும் குடும்பத்தாரை சந்தித்து நலம் விசாரித்தார்.

மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சக்கரபாணி, பி.மூர்த்தி, கீதா ஜீவன், பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், டி.ஆர்.பி ராஜா மற்றும் ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ மற்றும் எம்எல்ஏக்கள் முருகேசன், தமிழரசி, எம்பிக்கள், வாரியத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: ​பசும்பொன் திருமகனாரின் நினைவைப் போற்றக்கூடிய இந்த நினைவிடத்தை 1969ல் பார்வையிட்டு, 1974ல் மணிமண்டபமாக உருவாக்கி கொடுத்தவர் கலைஞர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெயரால் ரூ.25 லட்சத்தில் அறக்கட்டளையை உருவாக்கினார். தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பசும்பொன் கிராமத்துக்கு மட்டும் மொத்தம் ரூ.2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் பல்வேறு பணிகளைச் செய்து கொடுத்தது திமுக அரசு. ​1989ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற புதிய இடஒதுக்கீடு உரிமையை உருவாக்கி கல்வி, வேலைவாய்ப்பில் இந்த சமூக மக்கள் முன்னேற வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தவரும் கலைஞர்தான். இப்படி, நிறைய செய்து பெருமைப்படுத்தியவர் கலைஞர். அரசு சார்பில் மேலநீலிதநல்லூரில் அமைந்த பசும்பொன் தேவர் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதோடு 44.94 ஏக்கர் நிலத்தையும் கலைஞர் வழங்கி இருக்கிறார்.

அந்த கல்வி நிறுவனத்தில் பிரச்னை ஏற்பட்டதால், இப்போது அரசு மேற்பார்வையில் அந்த கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேவர் ஜெயந்தி விழாவின்போது கூட்ட நெரிசலை தவிர்க்கக் கூடிய வகையில் வெயில் மற்றும் மழையிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க, தேவர் நினைவிடத்தில் ரூ.1 கோடியே 55 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கக் கூடிய தெய்வத்திருமகனார் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை கடந்த ஆண்டு திறந்து வைத்தேன். ​

புதிதாக பசும்பொன்னில் ஒரு திருமண மண்டபம் அமைக்க ஒரு கோரிக்கை வந்திருக்கிறது. அந்தக் கோரிக்கையை உடனடியாக ஏற்று ரூ.3 கோடி மதிப்பில் தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று இந்த நேரத்தில நான் உறுதியளிக்கிறேன். ​காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் முடிப்பதற்கு முயற்சி ஈடுபடுவோம். தேவருக்கு பாரத ரத்னா விருது தொடர்பான கோரிக்கையை இந்த அரசு வழிமொழிகிறது. இவ்வாறு கூறினார்.

* ‘மனநிறைவுடன் திரும்புகிறேன்’

முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், அடக்குமுறைச் சட்டங்களின் ஆதிக்கத்தில் இருந்து நம் மக்களை மீட்டு, நேதாஜியின் நம்பிக்கைக்குரியவராக நாட்டு விடுதலைக்குப் போராடிய தீரர் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் ஜெயந்தியில் அவரது உருவச் சிலைக்கும், பசும்பொன் நினைவிடத்திலும் எனது மரியாதையைச் செலுத்தினேன். மேலும் மதுரை தெப்பகுளத்தில் மானம் காத்த மருதிருவர் உருவச் சிலைக்கும் மலர்மாலை அணிவித்து வணங்கினேன். பசும்பொன்னில் மாபெரும் திருமண மண்டபம் கட்டப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்ட மனநிறைவுடன் சென்னைக்கு திரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

* முதல்வர் அறிவிப்பு எடப்பாடி வரவேற்பு

தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தபோது, தேவருக்கு பாரத ரத்னா விருது தொடர்பான கோரிக்கையை அரசு வழிமொழியும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, முதல்வரின் அறிவிப்பை வரவேற்பதாக கூறினார்.