தாம்பரம்: செங்கல்பட்டு சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில், ஜி.ஜே.மல்டிகிளேவ் எனும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 143 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன. தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொதக் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில், பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் கஞ்சா அழிக்கும் பணிகள் நடந்தது.
கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு, தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, பள்ளிக்கரணை மது விலக்கு அமலாக்க பிரிவு ஆகிய காவல்நிலையங்களில் 143 குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 710 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.
இதன் மதிப்பு ரூ.85.20 லட்சம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், தாம்பரம் அமலாக்க பிரிவு உதவி ஆணையர் சதாசிவம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுவாஞ்சேரி ஆய்வாளர் சதீஷ், பள்ளிக்கரணை ஆய்வாளர் தினேஷ், தாம்பரம் ஆய்வாளர் தேவி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


