Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேனிக்காரர் பையன் புதிய கட்சிக்கு தாவப் போவதாக சொல்கிறார் wiki யானந்தா

‘‘மாம்பழக் கட்சி மகன் அணி மாவட்ட செயலாளர்கள் இடையே பனிப்போராமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கொசுவலை மாவட்டத்தில் மாம்பழ கட்சி ‘மணிக்கு’ உரிய ஆதரவாளர்கள் இடையே பனிப்போர் நீடித்து வருகிறதாம். கொசுவலை மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் மணிக்கு பெயர் பெற்ற ஆதரவாளர்கள் உள்ளார்களாம். இவர்கள், 2 பேருக்கும் இடையேயான மோதல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாம். கொசுவலை மாநகர் முழுவதும் இவர்கள் இருவரும் இடையே நடக்கும் நேரிடை மோதல் குறித்து பேசி வருகிறார்களாம். மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளவர், பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறாராம். அதனால் தான் கொசுவலை மாநகருக்கு அடிக்கடி வருகிறாராம். இதன் மூலம் அவருக்கு வேண்டியது அனைத்தும் கிடைக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எந்தநேரத்திலும் ஜம்ப் செய்யப் போறாராமே தேனிக்காரர் பையன்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியோடு இணைந்தே தீருவேன் என உறுதிபூண்டுள்ள தேனிக்காரர், அதற்கான முயற்சிகளில் இன்னும் ஈடுபட்டுக்கிட்டு இருக்காராம்.. இதற்காக அவர் நம்புவது மலராத கட்சியை தானாம். இருந்தாலும் அந்த கூட்டணியிலிருந்து வெளியே வந்திட்டாராம்.. இவ்வாறு தந்தை தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில் தனயனான மாஜி எம்பியின் எண்ணமெல்லாம் நடிகர் கட்சியுடன் ஒட்டிக்கொள்வதில் தான் இருக்குதாம்.. தந்தையோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் அதை பெரியதாகவே அவர் கண்டுகொள்ளவில்லையாம்..

தந்தை முதல்வராக இருந்த காலத்திலும், ஒருங்கிணைப்பாளராக இருந்தபோதும், தந்தையுடன் இலைக்கட்சியை வலுப்படுத்துவதில் எந்த வேகத்தையும் காட்டலையாம்.. தந்தைக்கென ஒரு கோஷ்டியையும் உருவாக்கலையாம்.. ஆனால் பின்வரிசையில் சிங்கிளாக இருந்த இலைக்கட்சி தலைவர், செய்யவேண்டியதை சிறப்பாக செஞ்சி கட்சியின் தலைவராக ஆகி, அசைக்க முடியாத இடத்துக்கு போயிட்டாராம்.. இதற்கிடையில் மகன், நடிகரின் கட்சியின் தொடர்பில் இருப்பதாக தகவல் கசிஞ்சிருக்கு.. அக்கட்சி வளர்வதில் ரொம்பவே ஆர்வமாக இருக்காராம்.. தூங்கா நகரத்துல நடிகர் நடத்திய மாநாட்டில் துட்டு கொடுத்து வேலைகளை ரகசியமாக செஞ்சாராம்..

அந்த நடிகருடன் நேரடி தொடர்பில் இல்லை என்றாலும் லாட்டரி துட்டுக்காரருடன் நெருங்கியிருக்காராம்.. அந்த கட்சியில் தற்போதுள்ள நிலையில் ஐந்துபேர் மட்டுமே வெளியே தெரியும் வகையில் இருக்காங்களாம்.. அவர்களுடன் இன்னொரு தலைவராக சேர்ந்து ஜொலிக்கப்போறேன்னு ஒத்தைக்காலில் நிற்காராம் அந்த மாஜி... ஏற்கனவே தந்தை தடுமாறிக்கிட்டிருக்கும் நிலையில், இன்னொரு கட்சிக்கு போனால் தந்தையின் பெயர் முற்றிலும் போயிடும் என இழுத்துபிடித்து வச்சியிருக்காங்களாம்.. என்றாலும் அவரது மனம் முழுவதும் நடிகரிடம் தான் இருக்குதாம்.. எந்நேரத்திலும் ஜம் செய்வாருன்னு அவருக்கு நெருக்கமானவங்க சொல்றாங்க... இதனால தந்தை இதயம் பக் பக் என வேகமா ஓடிக்கிட்டிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஜெயிலு மேட்டர் எல்லாம் ரொம்ப டெர்ரரா இருக்கும் போலிருக்கே.. என்னா மேட்டர்..’’ என்று ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி நகரில் இருக்கும் சென்ட்ரல் ஜெயிலில் செல்போன் வியாபாரம் சூடு பிடிச்சிருக்காம்.. ஆசனவாய் வழியாக செல்போனை பதுக்கி, கைதிகள் தான் கொண்டு போறதா சொல்லிக்கிட்டிருந்த நேரத்துல.. எல்லோருக்கும் ஷாக் கொடுக்கும் வேலையை, வார்டன் ஒருவர் செஞ்சி பிடிபட்டிருக்காரு.. யாருக்கெல்லாம் என்ன வேண்டும் என்ற தகவலை கைதி ஒருவர், உள்ளிருந்தே செல்போனில் பெண் ஒருவரிடம் ஆர்டர் கொடுப்பாராம்.. அந்த பெண் தனது கணவரான வார்டனுக்கு செல்போனில் கான்பரன்ஸ் போடுவாராம்.. இவ்வாறு பொருட்கள் உள்ளே போயிருக்கு என்பதை கண்டுபிடிச்சிருக்காங்களாம்.. அதோடு பத்துக்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகளும் சப்ளை செய்வது கண்டுபிடிக்கப்பட்டிருக்காம்.. அவர்களுக்கும் கூண்டு ஒன்றை ரெடி பண்ணி வச்சிருக்காங்களாம்..

இங்க தான் இப்படின்னா, இன்னொரு ஜெயிலுல போலியா பில் கட்டை தயாரிச்சி முட்டை, கீரை, சிக்கன் வாங்கியதாக ஒரு பெரும் மோசடியும் நடந்துருக்கு.. இச்சிறையின் கண்காணிப்பாளராக லேடி அதிகாரி இருந்திருக்காங்க.. மாங்கனி ஜெயிலில் அதிகாரியாக இருந்த போது, இலைக்கட்சியின் உச்சதலைவர் எங்க சொந்தக்காரருன்னு சொல்லி, அதிரடி காட்டி எல்லாரையும் பயப்பட வச்சதா சொல்றாங்க.. ஆனால் சங்ககிரியில வந்த மோசடியில சிக்கி சஸ்பெண்டாகியிருக்காராம். இதனால அச்சிறையில் இருக்கும் சக வார்டன்கள் ரொம்பவே ஹேப்பியா இருக்காங்களாம்..

இந்த நேரத்துல மாங்கனி காக்கி டிப்பார்ட்மெண்டில் நடந்த சம்பவம் ஒன்னு, ஆபீசர்களுக்கே அதிர்ச்சியை கொடுத்திருக்காம்.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்குதாம்.. மாநகரில் 14 இன்ஸ்பெக்டர்கள் வெளிஇடங்களுக்கு மாற்றப்படும் பட்டியலில் இருக்காங்களாம்.. இந்த காலக்கட்டத்திற்குள் முடிந்ததை லபக்கிட வேண்டும் என்ற திட்டத்தோடு, சில திரி ஸ்டார் அதிகாரிகள் கங்கணம் கட்டிக்கொண்டு வேலையில ஈடுபட்டிருக்காங்களாம்.. இங்குள்ள மங்களகரமான ஸ்டேசன் வளாகத்தில், பப்ளிக் ஒருவர் டூவீலரை பூட்டுப்போட்டு நிறுத்தியிருந்தாராம்.. ரெண்டாவது நாள் வந்து பார்த்த போது, வண்டியை காணலையாம்..

ஸ்டேசனிலேயே டூவீலரை காணலயா? என்ற அதிர்ச்சியோடு இருந்த நிலையில், திரி ஸ்டார் ஆபீசர் ஒருவர், இஞ்சி டீ வாங்க வண்டியை அனுப்பியிருக்கேன்னு ரொம்பவே கூலா சொன்னாங்களாம்.. அதெப்படி பூட்டியிருந்த வண்டியில போக முடியும்? என்ற அதிர்ச்சியில இருந்த நிலையில், ரெண்டு மணி நேரத்திற்கு பிறகு வண்டி ஸ்டேசனுக்கு வந்துச்சாம்.. ஸ்டேசனிலேயே வண்டியை தூக்கும் சக்தியை, யார் கொடுத்தாங்கன்னு அங்கிருக்கும் சக காக்கிகள் மூக்கின் மேல் விரலை வச்சிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.