Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேனிக்காரர், சேலத்துக்காரரின் தலைக்கு மேல தொங்கும் கத்தி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஊர்ல நடையா நடப்பது மட்டும்தான் நடக்குதாம். வேற எதுவும் நடக்கலைன்னு மக்கள் புலம்புறாங்களாமே..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.

‘‘கிரிவலம் மாவட்டத்துல கம் என்று முடியுற நான்கு எழுத்து ஊர் நகர் ஆட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த நகர் ஆட்சி ஆபிசுல புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட தலைமை அதிகாரி முழு நேரம் அலுவலகத்துல இருக்குறதே இல்லையாம்.. அவர் இல்லாததால பணிகளும் சரியாக நடக்குறதில்லையாம்.. பொதுமக்கள் ஏதாவது பிரச்னை, கோரிக்கைனு மனு அளிக்க போனா, சம்பந்தப்பட்ட அதிகாரி மக்களை சந்திக்குறத தவிர்த்துடுறாராம்.. அதுமட்டுமில்லாம, நகர் ஆட்சியில வரியும் வசூலிக்காம அப்படி கிடப்புல இருக்குதாம்.. இதுல தலைமை அதிகாரிக்கும், பிரசிடென்டுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்குதாம்..

இதனால புதுசா வீடு கட்ட அனுமதி, கட்டுன வீட்டுக்கு வரி செலுத்துறதுன்னு ஜனங்க நடையாக, நடக்குறாங்களாம்.. ஆனாலும் வரியும், கட்டிட அனுமதியும் கிடைக்காம தவிக்குறாங்களாம்.. ஊராட்சி அளவில் நடக்கும் பணி கூட இங்க நடக்கவே இல்லையேன்னு அந்த நகரத்தோட மக்கள் புலம்ப ஆரம்பிச்சிருக்காங்க.. இதனால சம்பந்தப்பட்ட அதிகாரிங்க உடனடியாக என்னதான் அந்த நகரத்துல நடக்குதுன்னு விசாரணைய நடத்தி பிரச்னைக்கு புள்ளி வைக்கணும்னு ஜனங்க குரல் ஒலிக்க தொடங்கியிருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தனக்கு மீண்டும் போட்டியிட சீட் கிடைக்காது என்பதால் கூட்டணி கட்சிக்கு தொகுதியை தள்ளிவிடும்படி தலைமையை நச்சரித்து வர்றாராமே மாஜி இலைக்கட்சி வேட்பாளர்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் மூன்றாம் படை வீடு தொகுதியில் இலைக்கட்சியில் நாளுக்கு நாள் கோஷ்டி பூசல் உச்சமடைந்து வருது.. மூத்த நிர்வாகிகள் ஒரு அணியாகவும், மற்றவர்கள் ஒரு அணியாகவும் செயல்பட்டு வர்றாங்க.. இதுபோக கடந்த தேர்தலில் இலைக்கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் தலைமையில் மூன்றாவதாக ஒரு அணியும் களத்தில் குதித்து கச்சேரியை ஆரம்பித்திருக்கிறதாம்.. மற்ற இரு அணிகளும், இந்த மூன்றாவது அணியை பெரிதாக கண்டுகொள்வதில்லையாம்.. அதேசமயம், கடந்த முறை போட்டியிட வாய்ப்பு கிடைத்ததால் இந்த பகுதியில் நான்தான் கட்சியில் பெரிய ஆள் என்ற நினைப்பில், மூன்றாவது அணிக்காரர் யாரையும் மதிப்பதில்லையாம்.. அவரது ஒரே வேலை... கட்சியின் மாநில, மாவட்ட தலைவர்களுக்கு வாழ்த்து சொல்வதும், பிளக்ஸ் வைப்பது மட்டும்தானாம்.. இதனால், இவரை நம்பி பலன் இல்லை என்று அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக மற்ற இரு அணிகளிடமும் தஞ்சம் அடைந்து வருகின்றனராம்.. பலரும் தனக்கு எதிராக கிளம்பி விட்டதால் இம்முறை தனக்கு மீண்டும் சீட் கிடைக்க விட மாட்டார்கள் என முன்ஜாக்கிரதையாக யோசித்து, இந்த தொகுதியை எப்படியாவது கூட்டணி கட்சியினருக்கு தள்ளி விடும்படி தலைமையிடம் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தேனிக்காரர் தனது தலைக்கு மேல தொங்கும் கத்தியை மறந்து விட்டாராமே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘விசுவாசம் என்றால் இவரை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என மம்மியின் வாயால் நற்சான்றிதழ் பெற்றவர் தான் தேனிக்காரராம்.. ஆனால் அவருக்கு இலைக்கட்சியில் இடமில்லாமல் போயிற்று.. தற்போதைய இலைக்கட்சி தலைவரை நசுக்க வேண்டுமானால் எங்களுடன் சேர்ந்து மத்தியில மந்திரியாகிடலாமுன்னு ஆசைவார்த்தை கூறி ராமநாதபுரத்தில் பலாப்பழ சின்னத்தில் போட்டியிட வைத்தாராம் மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரர்.. அவரது ஆசை வலையில் விழுந்த தேனிக்காரர் தோல்வியை தான் பரிசாக பெற்றாராம்.. ஆனால் தன்னை வெற்றி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோர்ட்டின் கதவை தட்டியிருக்காராம்.. வெற்றி பெற்ற வேட்பாளர், வேட்புமனு அபிடவிட்டில் கம்பெனி ஒன்றின் இயக்குனராக இருப்பதுடன், அதற்கான சம்பளத்தையும் மறைச்சிட்டாருன்னு குற்றம் சொல்லியிருக்காராம் தேனிக்காரர்.. ஆனால் அவரது தலைக்கு மேல கத்தி தொங்குவதை அவர் மறந்துட்டாராம்.. கடந்த தேர்தலின்போது, தேனிக்காரரும் சொத்துகளை மறச்சிட்டதாக வழக்கு ஒன்று தயாரா இருக்குதாம்... அவரது ஊரில் உள்ள நீதிமன்ற வாசல் கதவை தட்டிக்கிட்டிருக்குதாம்.. விரைவில் அந்த வழக்கு உள்ளே சென்றால் தேனிக்காரருக்கு கடும் சிக்கல் ஏற்படுமாம்... தன் மீதிருக்கும் தவறை மறைத்து விட்டு நீ தப்பு செய்கிறாய்? என கேட்பதுபோல இருப்பதாக விவரமறிந்த கட்சிக்காரங்க பேசிக்கிறாங்களாம்.. அதேபோல இலைக்கட்சி தலைவர் மீதும் இதுபோன்ற வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் இருக்குதாம்.. நீண்டநாட்களாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கும் எந்நேரமும் விசாரணைக்கு வரலாம் எனவும் சொல்லப்பட்டு வருது.. ஆனால் திரட்டி வைத்திருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் அரசாங்க ஆதாரமாம்.. எந்த வகையிலும் தப்ப முடியாத வகையில் தேனியை சேர்ந்த இன்ஜினியர் மிலானி தாக்கல் செஞ்சிருக்காராம்.. குற்றம் நிரூபிக்கப்படுமானால் 6 மாத சிறை தண்டனை மட்டும் தான் கிடைக்குமாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி முக்கிய நிர்வாகிகள் பதுங்கிப்போகும் அளவுக்கு இருக்கும் பவர்புல் நிர்வாகி யாரு..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘டெல்டாவில் இலை கட்சியில் சைலன்டாகவும், பவுர் புல்லாகவும் ஒரு நபர் இருந்து வருகிறாராம்.. இளம் வயதுள்ள அந்த நபரை பார்த்து, இலை கட்சியின் மூத்த தலைவர்கள் அடங்கிப் போகிற அளவுக்கு அந்த நபர் பவர் சென்டராக இருக்கிறாராம்.. பவர் சென்டராக உள்ள நபர், நேரிடையாக தலைமையுடன் தொடர்பில் உள்ளாராம்.. நினைத்ததை அவர் சாதித்து விடுவாராம்.. அந்த அளவுக்கு இலை கட்சியில் அவருக்கு பவர் இருக்காம்.. இதை தெரிந்து கொண்ட கட்சியின் மூத்த தலைவர்கள் நமக்கு எதுக்கு வம்பு என்று நினைத்து, பவர் சென்டராக உள்ளவரிடம் அனுசரித்து சென்று வருகிறார்களாம்.. டெல்டாவில் இலை கட்சியில் யார், யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதை கூட அவர் முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.