தேனி : தேனி பழைய பஸ் நிலையத்திற்குள் ராஜவாய்க்காலுக்கான நிலத்தடி சுரங்கத்துடன் கூடிய இரண்டாம் கட்ட கான்கிரீட் பாலத்தின் மீதான கான்கிரீட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தேனி நகரில் கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து வெளியேறும் ராஜவாய்க்காலானது தேனி நகர் பழைய பஸ் நிலையமான காமராஜர் பஸ் முனையத்தின் வழியாக சுமார் 2 கிமீ தூரத்தை கடந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமரைக்குளம் கண்மாயை அடைகிறது. ராஜவாய்க்கால் சுமார் 20 மீ அகலம் கொண்டதாக இருந்தாலும், வணிகர்கள், குடியிருப்பாளர்கள் என பலர் ஆக்கிரமித்ததால் ராஜவாய்க்கால் சுருங்கி கழிவுநீரோடை போல மாறியது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவினைத்தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் தேனி நகர் பழைய பஸ் நிலையத்திற்குள் ராஜவாய்க்கால் பகுதியில் சுமார் 10 அடி அகலம், 10 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான தரைமட்ட சுரங்கம் அமைத்து அதன்வழியாக ராஜவாய்க்கால் தண்ணீரை ராஜவாய்க்காலில் பாய்ந்தோட செய்யவும், இந்த தரைமட்ட சுரங்கத்தின் மீது கான்கிரீட் பாலம் அமைத்து, அதன் மீது பேருந்துகள் சென்று வரவும் தேனி-அல்லிநகரம் நகராட்சி நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, தேனி பழைய பஸ் நிலையமான காமராஜர் பஸ் முனையத்தின் தெற்கு பகுதியில் ராஜவாய்க்கால் தரைமட்ட நீர்சுரங்கமானது 90 மீட்டர் நீளத்திற்கு அமைக்க முடிவு செய்யப்பட்டு முதல்கட்டமாக 40 மீட்டர் நீளத்திற்கு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் துவக்கப்பட்டு முடிவடைந்தது.
இரண்டாம் கட்டமாக, தேனி-கம்பம் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் பாலம் அமைக்கும் பணி முடிந்ததையடுத்து, பழைய பஸ்நிலைய வளாகத்திற்குள் தற்போது 50 மீட்டர் நீளத்திற்கு ராஜவாய்க்கால் பாலம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
இரண்டாம் கட்டப்பணிகள் துவங்கியதையடுத்து, பழைய பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் தேனி புதிய பஸ்நிலையத்தில் இருந்து தேனி பழைய பஸ் நிலையம் வழியாக போடி, கம்பம், குமுளி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், தேனி நகர் மதுரை ரோட்டில் பகவதி அம்மன்கோயில் பிரிவிற்கு எதிர்புறம் தற்காலிக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு பேருந்துகள் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் சென்று வருகிறது.
இதேபோல, போடி, கம்பம், குமுளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேனி புதிய பஸ்நிலையம் செல்லும் பேருந்துகள், பழைய பஸ் நிலையம் எதிரே கம்பம் சாலையில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கிறது.
இதனால், மதுரை சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக இச்சாலை வழியாக செல்வோர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், வணிக நிறுவனங்கள் முன்பாக இருசக்கர வாகனங்களை கூட நிறுத்த முடியாமல் வாடிக்கையாளர்கள் இச்சாலையில் உள்ள கடைகளை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வணிகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்களும் பஸ்சிற்குள் ஏறிச் செல்ல குறுகலான பஸ் நிறுத்தங்களால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறனர். மாணவ, மாணவியர் முண்டியடித்து பேருந்துகளில் ஏறும்போதே பேருந்துகளை ஓட்டுனர்கள் எடுப்பதால் தற்காலிக பஸ் நிறுத்தங்களில் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பழைய பஸ் நிலையத்திற்குள் நடந்து வரும் இரண்டாம் கட்ட ராஜவாய்க்கால் கான்கிரீட் சுரங்க பாலம் கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தினகரன் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து தற்போது பணிகள் வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது.
இதன்காரணமாக தற்போது பழைய பஸ்நிலையத்திற்குள் ராஜவாய்க்கால் சுரங்கபாலத்தின் அடித்தளம்,பக்கவாட்டில் கான்கிரீட் சுவர்கள் அமைத்து முடிக்கப்பட்டு தற்போது பாலத்தின் மேல்தளத்தில் கான்கிரீட் ஓடுதளம் அமைக்கும் பணிக்கான சென்ட்ரிங் பணிகள் நடந்து வருகிறது.
சென்ட்ரிங் பணியினைத் தொடர்ந்து வேகமாக கான்கிரீட் ஓடுதளம் அமைத்து, கான்கிரீட் கியூரிங் செய்து, விரைவில் பழைய பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.